மும்பை: ஐரோப்பாவில் விடுமுறை கொண்டாடிக் கொண்டிருந்த பாலிவுட் நடிகை சிருஷ்டி ரொடே ஆக்ஸிஜன் அளவு குறைந்து மயங்கி விழுந்தார். இந்தியில் டிவி தொடர்களில் நடித்துவிட்டு, சினிமாவுக்கு வந்தவர் சிருஷ்டி ரொடே. சமீபத்தில் விடுமுறை கொண்டாட ஐரோப்ப நாடுகளுக்கு சென்றார். சாலையில் சுற்றிவந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் மும்பை திரும்பினார். சிருஷ்டிக்கு நிமோனியா தாக்கியிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சிருஷ்டி கூறும்போது, ‘‘ஆம்ஸ்டர்டாமில் இருந்தபோது நிமோனியாவால் கடுமையாக நோய்வாய்ப்பட்டேன். அது என்னை கடுமையாக பாதித்தது. எனது ஆக்ஸிஜன் அளவு திடீரென குறைந்துவிட்டது, மருத்துவமனையில் நோயுடன் மிக கடினமாக போராடினேன். வீட்டிற்குச் சென்றால் போதும் என்று பயந்தேன். எனது நிலை மிகவும் மோசமாகிவிட்டது, விசாவும் காலாவதியானது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, இறுதியாக மும்பைக்கு திரும்பினேன், ஆனால் நான் இன்னும் குணமடையவில்லை. அதற்கு பல மாதங்கள் ஆகலாம் என்று என் மருத்துவர்கள் கூறுகிறார்கள். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறேன். இன்னும் பலவீனமாக இருக்கிறேன். அதே சமயம் நம்பிக்கையுடன் இருக்கிறேன்’’ என்றார்.