ஐதராபாத்: ‘புஷ்பா 2’ படம் கடந்த 5ம் தேதி வெளியானது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் சிறப்பு காட்சி ஐதராபாத்திலுள்ள சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்டது. அப்போது, அங்கு எந்த முன் அறிவிப்புமின்றி அல்லு அர்ஜூன் சென்றார். திடீரென அவரை பார்த்ததால் ரசிகர்கள் அனைவரும் அவரை நோக்கி ஓடினர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி (வயது 39) என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் ஸ்ரீதேஜ் படுகாயமடைந்து மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிறுவன் ஸ்ரீதேஜை இதுவரை பார்க்க செல்லாதது ஏன் என அல்லு அர்ஜுனை நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக டிவிட்டரில் அல்லு அர்ஜுன் பதில் அளித்துள்ளார். அந்த பதிவில், “துரதிர்ஷ்டவசமான அந்த சம்பவத்திற்குப் பிறகு தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருக்கும் சிறுவன் ஸ்ரீ தேஜ் குறித்து நான் மிகுந்த கவலையில் இருக்கிறேன். இப்போது நடைபெற்று வரும் சட்ட நடவடிக்கைகள் காரணமாக, அவரையும் அவரது குடும்பத்தினரையும் இந்த நேரத்தில் சந்திக்க வேண்டாம் என எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் எனது பிரார்த்தனைகள் அவர்களுடன் இருக்கும், மேலும் மருத்துவ மற்றும் குடும்பத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான பொறுப்பை நான் ஏற்பதாக உறுதியளிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.