ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அர்த்த மண்டபத்தில் வெளியேற்றமா? இளையராஜா விளக்கம்

சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற திவ்ய பாசுரம் இசைக்கச்சேரியில் பங்கேற்ற இளையராஜா அங்குள்ள புகழ்பெற்ற ஆண்டாள் கோயிலில் வழிபாடு நடத்தினார். அங்கு ஆடிப்பூரப் பந்தலில் நடைபெற்ற விழாவில் இளையராஜா இசையமைத்து பாடிய திவ்ய பாசுரம் இசைக்கச்சேரியும், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேறப்பதற்காக வந்திருந்த இளையராஜா ஆண்டாள் கோயிலில் தரிசனத்திற்காக சென்றார். அவருக்கு பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது. ஐதராபாத்தை சேர்ந்த ஜீயர்கள் ஆண்டாள் கோயிலில் உள்ள மணவாளன் மாமுனிவர் மடத்தின் சடகோபர் ராஜனுஜர் ஜீயரும் பங்கேற்றனர். அப்போது ஜீயர்கள் அர்த்த மண்டபத்துக்குள் சென்றபோது, இளையராஜாவும் உள்ளே சென்றார்.

இதைக் கண்ட ஜீயர்களும், பட்டர்களும் இளையராஜாவை வெளியே நிற்குமாறு கூறியதாக தெரிகிறது. அதன் பிறகு அர்த்த மண்டபத்துக்கு வெளியே சென்ற இளையராஜா, அங்கிருந்தபடியே வழிபாடு செய்தார். இதுகுறித்து அறநிலையத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் செல்லத்துரை, விருதுநகர் கலெக்டருக்கு அளித்துள்ள அறிக்கையில், இக்கோயில் மரபு படியும், பழக்க வழக்கப்படியும் அர்த்த மண்டபம் வரை திருக்கோயிலின் அர்ச்சகர், பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை என்று செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். இளையராஜா கூறும்போது, ‘‘என்னை பற்றி வதந்தி பரவி உள்ளது. நான் எந்த இடத்திலும் சுயமரியாதையை விட்டு கொடுப்பவன் அல்ல. இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை’’ என்றார்.

Related Stories: