தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர், தேவயானி. தன்னை ஹீரோயினாக வைத்து ‘நீ வருவாய் என…’, ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ ஆகிய படங்களை இயக்கிய இராஜகுமாரனை காதல் திருமணம் செய்த அவர், பிறகு இனியா, பிரியங்கா ஆகிய மகள்களுக்கு தாயானார். சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்த அவருக்கு டி.வி சீரியல்கள் கைகொடுத்தது. அதன்மூலமும், விளம்பரங்களின் மூலமும் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமான அவர், மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
தனது கணவருடன் இணைந்து ‘காதலுடன்…’, ‘திருமதி தமிழ்’ ஆகிய படங்களை தயாரித்த அனுபவம் பெற்றிருக்கும் அவர், திரைப்படம் இயக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார். இதற்காக சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் தனியார் திரைப்படக் கல்லூரியில் டைரக்ஷன் கோர்ஸில் சேர்ந்த அவர், முன்னோட்டமாக ஒரு குறும்படம் இயக்கியுள்ளார். அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணி நடந்து வருகிறது. இப்படத்தை இளையராஜாவின் பார்வைக்குக் கொண்டு சென்ற தேவயானி, இசையமைத்துக் கொடுக்கும்படி கேட்க, உடனே அவர் சம்மதம் தெரிவித்தார். விரைவில் அந்த தகவல் வெளியாகிறது. ஏற்கனவே தேவயானி நடித்திருக்கும் பல படங்களுக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.