சென்னை: மலையாளத்தில் ‘கிஸ்மத்’, ‘இஷ்க்’, ‘கும்பளங்கி நைட்ஸ்’, ‘ஆர்டிஎக்ஸ்’ போன்ற படங்களில் நடித்த ேஷன் நிகாம், ‘மெட்ராஸ்காரன்’ மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ‘ரங்கோலி’ வாலி மோகன்தாஸ் இயக்கியுள்ளார். கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் நடித்துள்ளனர். எஸ்.ஆர் புரொடக்ஷன்ஸ் ஜெகதீஷ் தயாரிக்க, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். முதல் பாடலான ‘தைதக்க கல்யாணம்’ என்ற பாடல் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அடுத்த பாடலான ‘காதல் சடுகுடு’ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
இது மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், ஷாலினி நடித்து வெளியான ‘அலைபாயுதே’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘காதல் சடுகுடு’ என்ற பாடலின் ரீமேக். ஆதித்யா ஆர்.கே பாடியுள்ளார். இப்பாடலை ரீமேக் செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் அனுமதி அளித்தாரா என்று கேட்டபோது, ‘முறைப்படி அனுமதி வாங்கிய பிறகே இப்பாடல் ரீமேக் செய்யப்பட்டது. நானும், ஷேன் நிகாமும் கடினமான பயிற்சி பெற்று ஆடினோம். சதீஷ் குமார் நடனக்காட்சி அமைத்துள்ளார். இதில் ஆடிய அனுபவத்தை மறக்க முடியாது. தமிழில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தில் நடித்திருந்தேன். பிறகு தெலுங்கில் நடிப்பு, தயாரிப்பு என்று பிசியாகி விட்டேன். இப்போது மீண்டும் தமிழுக்கு வந்துள்ளேன்’ என்ற நிஹாரிகா கொனிடேலா, விரைவில் தமிழில் சரளமாகப் பேச கற்றுக்கொள்வதாக உறுதியளித்தார்.