சென்னை: விநியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து நடிகராக மாறியுள்ள ஜேஎஸ்கே.சதீஷ் குமார், தற்போது இயக்குனராக அறிமுகமாகும் படம், ‘ஃபயர்’. இதில் பாலாஜி முருகதாஸ், ரக்ஷிதா மகாலட்சுமி, சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சுரேஷ் சக்ரவர்த்தி, சிங்கம்புலி, வெற்றிவேல் ராஜா நடித்துள்ளனர். ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்க, டிகே இசை அமைத்துள்ளார். சதீஷ் ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். மதுரகவி, ரா பாடல்கள் எழுதியுள்ளனர். இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.முரளி ராமசாமி, பாண்டியராஜன், டி.சிவா, எஸ்.கே.ஜீவா மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
அப்போது ஜே.சதீஷ் குமார் பேசுகையில், ‘இது 4 பெண்களைப் பற்றிய கதை. பெண் குழந்தைகளை ஆசையாக வளர்க்கிறோம். ஆனால், அவர்களைப் பாதுகாப்பாக வளர்க்கிறோமா என்பது கேள்வி. அதுபற்றி பேசும் இப்படத்தை விழிப்புணர்வு படமாகவும் எடுத்துக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் நடந்த உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் கதையை எழுதியுள்ளேன். இயக்குனர் எஸ்.கே.ஜீவா வசனம் எழுதியுள்ளார். நான் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். படம் ரெடியானவுடன் பெண்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு தனித்தனியாக ஷோ வைத்து, அவர்களின் கருத்துகளைக் கேட்டேன். அனைவரும் பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ளனர். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்’ என்றார்.