சென்னை: தமிழில் இந்த ஆண்டு வெளியாகியுள்ள 214 படங்களில் 200 படங்கள் தோல்வி அடைந்துள்ளன. இதன் மூலம் ரூ.1800 கோடிக்கு மேல் இழப்பை தமிழ் திரையுலகம் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் 200க்கு மேற்பட்ட தமிழ் நேரடி படங்கள் திரைக்கு வருகின்றன. இந்த ஆண்டில் நேற்றுடன் 214 படங்கள் திரைக்கு வந்துவிட்டன. இதில் விரல் விட்டு எண்ணும் வகையில்தான் தமிழ் சினிமாவின் வெற்றிப் படங்கள் அமைந்துள்ளன. அதே சமயம், குறைந்த பட்ஜெட்டில் உருவாகி, பல கோடி லாபம் பார்க்கும் வகையில் இந்த ஆண்டு மலையாள சினிமா கடந்த ஆண்டைப் போலவே தெம்பாக உள்ளது.
தமிழ் சினிமாவில் ரஜினியின் வேட்டையன், விஜய்யின் கோட், தனுஷ் நடித்த ராயன், சிவகார்த்திகேயன் நடித்த அமரன், சுந்தர்.சியின் அரண்மனை 4, வாழை ஆகியவைதான் பெரும் வெற்றிப்படங்களாக அமைந்தன. அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்த மகாராஜா, அருள்நிதியின் டிமாண்டி காலனி 2, சூரி நடித்த கருடன் ஆகிய படங்கள் அடுத்த கட்ட வெற்றியை சந்தித்தவை. குறைந்த பட்ஜெட்டில் உருவாகி நிறைவான லாபத்தை பெற்ற படங்களாக ஹாட் ஸ்பாட், லப்பர் பந்து, பிளாக், ஸ்டார், பேச்சி படங்கள் இருந்துள்ளன.
மொத்தமாக 14 படங்கள்தான் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் ஆகியோருக்கு லாபத்தை கொடுத்த படங்களாகும். இது தவிர, சில படங்கள் தயாரிப்பாளர்களுக்கு மட்டும் லாபத்தை கொடுத்து வினியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் அதிபர்களுக்கும் நஷ்டத்தை கொடுத்திருக்கிறது. பெரும்பாலான படங்கள் மூவருக்குமே ஈடு செய்ய முடியாத நஷ்டத்தை கொடுத்துள்ளன.
தோல்வி அடைந்த படங்களில் அதிக பட்ஜெட்டில் உருவான, இந்தியன் 2, கங்குவா, லால் சலாம், கேப்டன் மில்லர், அயலான், சைரன், பிரதர் ஆகிய படங்களும் எதிர்பார்க்கப்பட்ட பிளடி பெக்கர், டியர், ரோமியோ, ஹிட்லர் படங்களும் எதிர்பார்த்த வெற்றியை எட்டவில்லை.
ஒரு வருடத்தில் 200 படங்கள் வரை தோல்வி அடைவது இதுவே முதல் முறையாகும். தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக வெற்றி சதவீதம் குறைந்தபடியே வருகிறது. அப்படி பார்க்கும்போது கடந்த ஆண்டு கிடைத்த வெற்றி சதவீதத்தை விட இந்த முறை வெற்றிப் படங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. சராசரியாக ரூ.1800 கோடிக்கு மேல் தமிழ் திரையுலகிற்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சினிமா வர்த்தக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தியேட்டர்களில் படங்கள் ஓடாததால் ஓடிடி, சாட்டிலைட் ஆகிய உரிமமும் எதிர்பார்த்த விலைக்கு போகாமல், பாதிக்கப்பட்டு வருவதாக தயாரிப்பாளர்கள் சொல்கின்றனர். முன்பெல்லாம் படம் வெளியாவதற்கு முன்பே ஓடிடி உரிமம் விற்கப்பட்டு வந்தது. இப்போது தியேட்டரில் கிடைக்கும் வசூல், சோஷியல் மீடியாவில் ரசிகர்களின் விமர்சனம் இதையெல்லாம் வைத்துதான் ஓடிடி உரிமம் பற்றியே பேச்சு நடக்கிறது என்றும் வருத்தத்துடன் கூறுகிறார்கள். இதற்கெல்லாம் ஒரே காரணம், தமிழ் பட இயக்குனர்கள், திரைக்கதையில் கோட்டை விடுவதுதான்.
தோல்வி அடைந்த 200 படங்களில் கிட்டத்தட்ட 80 படங்கள் வரை முதல் பாதி நன்றாக இருந்து, இரண்டாம் பாதி சரியில்லை என விமர்சிக்கப்பட்ட படங்களாக இருந்துள்ளன. திரைக்கதை மலையாள படங்களைப் போல் ஒரே நேர்க்கோட்டில் செல்லாமல், பாதி வரை ஒரு படமாகவும் மீது பாதி இன்னொரு படமாகவும் எடுத்து வைப்பதே தமிழ் படங்களின் பெரும் தோல்விக்கு காரணமாக சினிமா வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இதனால் புதிய ஆண்டிலாவது தமிழ் சினிமாவின் தோல்வி கதை முடிவுக்கு வருமா என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.