×

மாற்று சினிமாவை உருவாக்க பாடுபட்ட இயக்குனர் ‘குடிசை’ ஜெயபாரதி காலமானார்

சென்னை: தமிழில் மாற்று சினிமாவை உருவாக்க பாடுபட்ட இயக்குனர் ‘குடிசை’ ஜெயபாரதி (77), நுரையீரல் தொற்று காரணமாக நேற்று முன்தினம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 6 மணியளவில் ஜெயபாரதி காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்தர். நேற்று மாலை ஜெயபாரதியின் இறுதிச்சடங்கு நடந்தது.

1979ல் தமிழில் முதல்முறையாக கிரவுட் ஃபண்டிங் முறையில் தயாரித்து ஜெயபாரதி இயக்கிய படம், ‘குடிசை’. இதையடுத்து ‘ஊமை ஜனங்கள்’, ‘ரெண்டும் ரெண்டும் அஞ்சு’, ‘உச்சி வெயில்’, ‘நண்பா நண்பா’ ஆகிய படங்களை இயக்கினார். ஜெயபாரதி திரைப்பட இயக்குனர் மட்டுமின்றி, எழுத்தாளரும் கூட. தமிழ் எழுத்தாளர்களான து.ராமமூர்த்தி, சரோஜா ராமமூர்த்தி ஆகியோர் அவரது பெற்றோர்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பத்திரிகையாளராக இருந்தார். சிறுகதைகள் மற்றும் தமிழ், இந்தி, ஆங்கிலப் படங்களுக்கு விமர்சனங்கள் எழுதினார். 1976ல் கே.பாலசந்தர் இயக்கிய ‘மூன்று முடிச்சு’ படத்தில், ரஜினிகாந்த் நடித்திருந்த வேடத்தில் முதலில் ‘குடிசை’ ஜெயபாரதியை நடிக்க தேர்வு செய்திருந்தார். ஆனால், தனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்று ஜெயபாரதி மறுத்துவிட்டார்.

Tags : Kudisai' Jayabharathi ,CHENNAI ,Omanturar Government Hospital ,Jayabharathi ,
× RELATED இயக்குனர் ‘குடிசை’ ஜெயபாரதி மருத்துவமனையில் அனுமதி