சென்னை: மிர்ச்சி சிவா, வாகை சந்திரசேகர், கருணாகரன், ஹரீஷா, ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள படம், ‘சூது கவ்வும் 2’. சி.வி.குமார், எஸ்.தங்கராஜ் இணைந்து தயாரித்துள்ளனர். எஸ்.ஜே.அர்ஜூன் இயக்கியுள்ளார். பாடல்களுக்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசை அமைக்க, ஹரி எஸ்.ஆர் பின்னணி இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில் பா.ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ், நலன் குமாரசாமி, ஆதிக் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது சந்தோஷ் நாராயணன் பேசியதாவது: நான் ‘அட்ட கத்தி’ படத்துக்கு இசை அமைப்பதற்கு முன்பு, என்னை பல தயாரிப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, என் மியூசிக்கை சுட்டிக்காட்டி, எப்படியாவது எனக்கு ஒரு படத்தில் இசை அமைக்க வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கியவர்தான், மிர்ச்சி சிவா. பல நல்ல படங்களுக்கு இசையமைத்த பிறகு திமிர் பிடித்ததால் பல மொக்கையான படங்களுக்கு இசை அமைத்தேன். இனி பா.ரஞ்சித் இயக்கும் படங்களுக்கு நான்தான் இசை அமைப்பேன். யாரையும் உள்ளே வர விட மாட்டேன். இது ஒரு கட்டளை.