சென்னை: இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன், சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. இந்த வருடத்துக்கான, 22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, வரும் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடக்கிறது. இதில், போட்டிப் பிரிவில் 12 தமிழ்ப் படங்களும் பல்வேறு இந்திய மொழிகளிலிருந்து 12 முதல் 15 படங்களும் உலக சினிமா போட்டிப் பிரிவில் 10 படங்களும் போட்டியில்லாத பிரிவில் கேன்ஸ், பெர்லின், வெனிஸ் உள்ளிட்ட சர்வதேச விழாக்களில் பங்கேற்ற படங்களும் திரையிடப்பட இருக்கின்றன. மொத்தம் 50 நாடுகளிலிருந்து 123 திரைப்படங்கள் பங்கேற்கின்றன. மாணவர்களுக்கான கட்டணம் ரூ.500. சினிமா தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ரூ.300. பொது நுழைவு சீட்டு ரூ.1000 என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று இந்த திரைப்பட விழாவின் இயக்குநர் ஏவி.எம்.கே. சண்முகம் தெரிவித்துள்ளார்.