அமரன் படத்துக்காக மன ரீதியாக தயார் ஆனேன்: சிவகார்த்திகேயன்

சென்னை: ‘அமரன்’ படம் இன்று திரைக்கு வருகிறது. படம் குறித்து சிவகார்த்திகேயன் கூறியது: படத்தில் ராணுவ உடையை, கடைசியாக போடும் போது, நினைவாக வைத்துக்கொள்ள அந்த உடையை வீட்டுக்குக் கொண்டு வந்துவிட்டேன். ராணுவ உடை அணிந்த பிறகு சின்னச் சின்ன மாற்றங்கள் எனக்குள் வந்துள்ளன. காமெடி, கலாய்ப்பது என்பது என் பிறப்பிலேயே வந்து விட்டது. படப்பிடிப்பு தளம் சீரியஸாக இருக்கும், ஆனால் நான் கொஞ்சம் ஜாலியாத்தான் இருப்பேன்.

அதனால் இப்படத்தில் நடிக்கும் முன்னர் முதலில் மன ரீதியாக தான் தயாரானேன். பின்னர் தான் உடலை தயார் செய்தேன். உடல் வலிமை இருந்தால் தான், இப்படத்தில் நடிக்க சரியாக இருக்கும். உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்று கடினமாக எடைகளை தூக்கக்கூடிய ஆள் நான் கிடையாது. ஆனால், இப்படத்துக்கு கொஞ்சம் அதிகம் தூக்கிய காரணத்தினால் தான் கொஞ்சம் உடலில் மாற்றம் வந்தது. முகுந்த் கதை அனைவருக்கும் ஒரு செய்தியாகத் தான் தெரியும்.

ஆனால், இதை பற்றி படமாக தெரிய வேண்டும் என்பதால் எடுத்துள்ளோம். இந்த படத்தை பார்த்துவிட்டு ராணுவ அதிகாரிகள் பாராட்டினர். நீங்கள் தவறான துறையை (சினிமா) தேர்வு செய்திருக்கிறீர்கள். நீங்கள் இருக்க வேண்டியது எங்களுடன்தான் என அதிகாரிகள் சொன்னபோது எனக்கு பெருமையாக இருந்தது.

‘கொட்டுக்காளி’ படத்தை தயாரித்தபோதே, இந்த படம் மக்களுக்கு பிடிக்கும் எனத் தெரியும். நல்ல சினிமாவை ஆதரிப்பவர்கள், இப்படத்தையும் ஆதரித்தார்கள். ஆனால் இந்த படத்தை வெகுஜன மக்களிடம் நான் திணிக்கவில்லை. வெறும் 200 தியேட்டர்களில்தான் படத்தை வெளியிட்டோம். இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.

Related Stories: