சென்னை: பொழுதுபோக்குத் துறையை பைரசி எனும் திருட்டுத்தனமான ஒளிபரப்புகள் அச்சுறுத்தி வருகிறது. இதனால் கடந்த ஆண்டில் (2023) மட்டுமே பைரசி மூலம் ரூ.22,400 கோடி பொருளாதாரம் நடந்துள்ளது. ஒன்றிய அரசுக்கு ரூ.4,300 கோடி ஜிஎஸ்டி இழப்பு ஏற்பட்டுள்ளது. சினிமா, வெப்சீரிஸ், பிற வீடியோ நிகழ்ச்சிகள், பாடல்கள் என எல்லாமே திருடப்பட்டு, இணையதளம் வழியாக மக்களுக்கு தரப்படுகிறது. இந்த பைரசி நடைமுறை பல காலமாக இருந்தாலும் இப்போது இதன் தாக்கம் அதிகரித்துள்ளது.
அதற்கு முக்கிய காரணம், ஓடிடியின் வருகை. ஓடிடிக்கள் மட்டுமே ஏராளமான நிறுவனங்கள் நடத்துகின்றன. அந்த ஓடிடிக்களில் வரும் திரைப்படங்கள், வெப்சீரிஸ்கள், குறும்படங்கள், ஆவணப் படங்கள், பிற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என எல்லாமே பைரசி மூலம் மக்களுக்கு கிடைத்துவிடுகிறது. இதுதான் இன்றைய பொழுதுபோக்குத் துறைக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டு பைரசி மூலம் நடக்கும் பொருளாதாரம் அதிகரித்தபடி இருக்கிறது.
எர்னஸ்ட் அண்ட் யங் மற்றும் இன்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் 51 சதவீதம் பேர், பைரசியை பயன்படுத்தி வருவதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. தியேட்டருக்கு சென்றால் ஒரு சிறு குடும்பம் என்றாலும் 3 ஆயிரம் ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. ஓடிடிக்கு சந்தா கட்டுவதென்றால் ஒரு ஓடிடிக்கு ரூ.1600 வரை செலுத்த வேண்டும்.
இது எதுவுமே இல்லாமல், இலவசமாக படங்களையும் வெப்சீரிஸ்களையும் பிற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் பார்க்க மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் அவர்கள் பைரசிக்கு மாறுகிறார்கள். இதனால் கடந்த ஆண்டில் மட்டுமே ரூ.22,400 கோடிக்கு பைரசி பொருளாதாரம் நடந்துள்ளது. தியேட்டர்களிலிருந்து ரூ.13,700 கோடிக்கான படங்கள் திருடப்பட்டுள்ளன. ஓடிடி தளங்கள் மூலம் 8,700 கோடி ரூபாய்க்கான வீடியோக்கள் களவாடப்பட்டுள்ளன.
இதன் மூலம் கடந்த ஓராண்டில் ஒன்றிய அரசுக்கு ரூ.4,300 கோடிக்கு ஜிஎஸ்டி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 வயது முதல் 35 வயதுடையவர்கள்தான் அதிகம் பைரசி பயன்படுத்துகிறார்கள். அதிலும் நகரத்தில் இருப்பவர்கள் அதிகம் பைரசி பயன்படுத்துவதில்லை.
ஆனால் டவுன் பகுதிகளில் இருப்பவர்களே அதிகம் பைரசியை பயன்படுத்துகிறார்கள். அதிலும் பெண்கள் பைரசியில் மூழ்கியிருக்கிறார்கள் என்றும் ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓடிடிக்களின் பொருளாதாரம் மட்டுமே 2026ம் ஆண்டில் ரூ.14,600 கோடி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, பைரசி மூலம் இந்த பொருளாதாரம் அடிவாங்கும் என வர்த்தகர்கள் எச்சரிக்கிறார்கள்.