சண்டிகர்: இந்தியா- தென் ஆப்ரிக்கா இடையே 2வது டி20 கிரிக்கெட் போட்டி சண்டிகரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. ஓபனராக களமிறங்கிய டி காக் இந்திய வேகங்களை சிதறடித்தார். ஸ்கோர் 38 ரன்னாக இருந்த போது ரிசா ஹெண்ட்ரிக்ஸ் 8 ரன்னில் வருண் சக்கரவர்த்தி பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து கேப்டன் மார்க்ரமுடன் ஜோடி சேர்ந்த டி காக் ஆட்டத்தின் வேகத்தை நிறுத்தாமல் சரவெடியாய் வெடித்தார். வருண் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்ட மார்க்ரம் கடைசியில் அவரது பந்திலே 29 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து அதிரடி ஆட்டம் காட்டி வந்த டி காக் 90 ரன்னில் (46 பந்து, 5 போர், 6 சிக்ஸ்) இருக்கும் போது ஜித்தேஷ் சர்மாவின் அட்டகாச கீப்பிங்கால் ரன் அவுட் ஆனார்.
தொடர்ந்து டோனவேன் பெரரா (30 ரன்), மில்லர் (20 ரன்) ஜோடி சேர்ந்து இறுதி வரை ஆட தென் ஆப்ரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் வருண் 2 விக்கெட், அக்சர் 1 விக்கெட் எடுத்தனர். 214 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் மளமளவென விக்கெட்கள் சரிந்தன. கில் 0 (1), அபிஷேக் 17 (8), அக்சர் 21 (21), சூர்யகுமார் 5 (4) ரன்னில் ஆட்டமிழந்தனர். ஹர்திக் (20), ஜிதேஷ் (27) ஓரளவுக்கு தாக்குபிடித்தனர். துபே 1 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி வரை தனி ஆளாக போராடி அரைசதம் அடித்த திலக் வர்மா 34 பந்தில் 62 ரன் விளாசியது வீணானது. இந்தியா 19.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி 51 ரன் வித்தியாசத்தில் தோற்றது.
