புதுச்சேரி : சமூக வலைதளத்தில் பிரபலமான பெண்கள் போட்டோவை மார்பிங் செய்து மிரட்டல் விடுத்த தமிழக யூடியூபரை போலீசார் கைது செய்தனர்.விருதுநகர் அருகில் உள்ள சாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பி.கே விஜய் (எ) துர்க்கை ராஜ். இவர் சமூக வலைதளமான யூடியூப்பில் சேனலை துவக்கி யூடியூப்பில் பிரபலமாக இருக்கின்ற பெண்களை அவர்களுடைய சேனலுக்கு சென்று நட்பாக பேசி வந்துள்ளார்.
பிறகு அவர்களுடைய புகைப்படத்தை பெற்று கொண்டு அதில் சமூக நடைமுறையில் இல்லாத தரக்குறைவான வார்த்தைகளை சேர்த்து அவருடைய யூடியூப் சேனலில் ஆடியோ லைவ் பதிவிட்டு விமர்சித்து வந்துள்ளார். மேலும் மிக முக்கிய தமிழக அரசியல் தலைவர்களை தர குறைவாக பேசி வீடியோ வெளியிடுவது போன்ற பல்வேறு தர குறைவான பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளார்.
ஆகையால் துர்க்கை ராஜ் மீது தமிழகத்தில் நான்கு இடங்களிலும், புதுச்சேரி சைபர் காவல் நிலையத்திலும் புகார் உள்ளது. இதுகுறித்து கடந்த ஆண்டு இணைய வழி காவல் ஆய்வாளர் கீர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இவர் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கு விசாரணையில் இருக்கும் போது மீண்டும் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கின்ற பெண்களுக்கு மிரட்டல் விடுவது அவர்களுடைய புகைப்படத்தை மார்பிங் செய்து அசிங்கமான வார்த்தைகளை மீண்டும், மீண்டும் பதிவிடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.
இதற்கிடையே புதுவை இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி ஆகியோர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இக்குழு நேற்று முன்தினம் நள்ளிரவு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் படந்தாள் கிராமத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து நேற்று புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post சமூக வலைதளத்தில் பிரபலமான பெண்கள் போட்டோவை மார்பிங் செய்து மிரட்டல் appeared first on Dinakaran.
