*திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி
திருச்சி : எல்எல்ஆர் வழங்குவதற்கு ரூ.1000 லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர், உதவியாளர் ஆகிய 2 பேரை திருச்சி லஞ்சஒழிப்பு துறை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.திருச்சி குண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன்.
ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் இருந்து 2 பேருக்கு டூவீலர், நான்கு சக்கர வாகனம் ஓட்டுநர் பயிற்சி பெற எல்எல்ஆர் கேட்டு திருச்சி – திண்டுக்கல் சாலை பிராட்டியூரில் உள்ள திருச்சி (மேற்கு) வட்டார போக்குவரத்து ஆபீசில் ஆன்லைனில் விண்ணப்பித்து உரிய கட்டணம் செலுத்தியுள்ளார்.
தொடர்ந்து, மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி (45), பழனியப்பனின் 2 எல்எல்ஆர் விண்ணப்பித்தை பரிசீலித்து வழங்கியதற்காக ரூ.1,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதில் லஞ்சம் கொடுக்க விரும்பாத பழனியப்பன் நேற்றுமுன்தினம் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் செய்தார். இந்த புகாரின்பேரில் டிஎஸ்பி மணிகண்டன் வழக்கு பதிவு செய்தார்.
இந்த நிலையில் நேற்று காலை பழனியப்பன், ரசாயணம் தடவிய ரூ.1000த்துடன் பிராட்டியூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அங்கிருந்த மணிபாரதி, தனது உதவியாளர் திலீப்குமார் மூலமாக பழனியப்பனிடம் இருந்து ரூ.1000 பெற்றுள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் ஆகியோர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குள் புகுந்து மணிபாரதி மற்றும் அவரது உதவியாளர் திலீப்குமார் ஆகியோரை மடக்கி பிடித்தனர்.
தொடர்ந்து சோதனையில் கணக்கில் வராத ரூ.13,000 திலீப்குமாரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. பிராட்டியூரில் மணிபாரதி தங்கியிருந்த வீட்டில் சோதனை செய்த போது அங்கு கணக்கில் வராத ரூ.1,90,000 கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து, விசாரணைக்கு பிறகு இருவரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்தது. விசாரணைக்கு பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். லஞ்ச வழக்கில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி சொந்த ஊர் சேலம் என்பது குறிப்பிடதக்கது.
மக்கள் புகார் அளிக்கலாம்
மக்கள் அளிக்கும் புகாரின் உண்மை தன்மையை ஆராய்ந்து லஞ்சஒழிப்பு துறை டிஎஸ்பி மணிகண்டன் துரித நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் மக்கள் எவ்வித அச்சமின்றி புகார் அளித்து வருகின்றனர்.
குறிப்பாக, சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் சரியாக இருந்தும், அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் உடனே டிஎஸ்பி மணிகண்டனின் செல்போன் எண்ணுக்கு 94981-57799 புகார் அளிக்கலாம். வாட்ஸ் அப்பிலும் தகவல் தெரிவிக்கலாம். புகாரின் உண்மை தன்மையை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்சஒழிப்பு துறையினர் தெரிவித்தனர்.
