பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி முத்து கவுண்டர் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (44). இவர், பொள்ளாச்சி அதிமுக இளைஞர் அணி இணைச்செயலாளராக உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கந்துவட்டி தொழில் செய்து வருகிறார். இவரிடம், ஜோதி நகர் ஏ காலனியை சேர்ந்த தீபா (30) என்பவர், 10 சதவீத வட்டியில் ரூ.1 லட்சம் கடன் பெற்று தவணை முறையில் செலுத்தி வந்தார்.
இந்நிலையில், தனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடனை திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலையில் தீபா இருந்தார். கடந்த 4ம் தேதி, தீபாவை செந்தில்குமார் செல்ேபானில் அழைத்து, கடனுக்கான வட்டி தொகையை கேட்டதுடன், தகாத வார்த்தையால் பேசி மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து புகாரின்பேரில், பொள்ளாச்சி கிழக்கு போலீசார் செந்தில்குமார் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
