*லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை
வேலூர் : வேலூர் மாவட்டம், செதுவாலை கிராமத்தைச் சேர்ந்தவர் இருசப்பன்(67), ஓய்வு பெற்ற தனியார் மருத்துவமனை டிரைவர். இவர் அதேபகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு விரிஞ்சிபுரம் மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
மேலும் வீட்டின் அருகே மின்கம்பம் நடுவதற்காகவும் ரூ.27,000 ஆன்லைன் மூலம் செலுத்தி உள்ளார். ஆனால் வீட்டிற்கு புதிய மின் இணைப்பு மற்றும் மின்கம்பம் நடும் பணிகள் மேற்கொள்ளவில்லை.
இதுகுறித்து இருசப்பன், மின்வாரிய அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டார். அப்போது வேலூர் கொணவட்டத்தை சேர்ந்த போர்மென் கிருபாகரன்(50), மின் இணைப்பு மற்றும் மின் கம்பம் நட ரூ.3 ஆயிரத்தை லஞ்சமாக கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் தர விருப்பமில்லாததால் இருசப்பன், இதுகுறித்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்படி, வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று இருசப்பனிடம் ரூ.3 ஆயிரம் பணத்தை கொடுத்து அனுப்பினர். பின்னர், இருசப்பன், போர்மேன் கிருபாகரனுக்கு போன் செய்தபோது, தெள்ளூர் பகுதியில் ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன் என்று அங்கு வர சொல்லி இருக்கிறார்.
இதையடுத்து, தெள்ளூரில் இருசப்பன், போர்மேன் கிருபாகரனிடம் பணம் கொடுக்கும்போது, அங்கு மறைந்திருந்த வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையிலான போலீசார் கிருபாகரனை கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் அவரிடம் இருந்து லஞ்ச பணத்தை பறிமுதல் செய்து, கிருபாகரனை விரிஞ்சிபுரத்தில் உள்ள இளநிலை மின் பொறியாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து, கிருபாகரனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற மின்வாரிய போர்மேன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post வேலூர் அருகே பரபரப்பு வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போர்மென் கைது appeared first on Dinakaran.
