மாநிலங்களவையில் வைகோ அன்புமணி உட்பட 6 எம்பிக்கள் ஓய்வு

புதுடெல்லி: மாநிலங்களவையில் 6 எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அவர்களுக்கு நேற்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களவை உறுப்பினர்கள் முகமது அப்துல்லா(திமுக), சந்திரசேகரன்(அதிமுக), அன்புமணி ராமதாஸ்(பாமக), எம். சண்முகம்(திமுக) வைகோ(மதிமுக) மற்றும் வில்சன்(திமுக) ஆகியோரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ் அவைத்தலைவர் ஜேபி நட்டா மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்த பல மூத்த எம்பிக்கள் ஓய்வு பெற்ற உறுப்பினர்கள் ஆற்றிய பங்களிப்புக்களுக்காக அவர்களை பாராட்டினார்கள்.  துணை தலைவர் ஹரிவன்ஷ் கூறுகையில், ‘‘ஓய்வு பெறும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் சபையின் விவாதங்களுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

பல்வேறு அனுபவங்கள், கண்ணோட்டங்கள் மற்றும் பொது சேவை, ஜனநாயக மதிப்புக்கான ஆழமான அர்ப்பணிப்பு உணர்வை கொண்டு வந்துள்ளனர். ” என்றார். அவை முன்னவர் ஜே.பி.நட்டா பேசுகையில், ‘‘ஓய்வு பெறும் உறுப்பினர்கள் தங்களது பதவிக்காலத்தில் கொள்கை, சட்டம் மற்றும் சமூகப் பிரச்னைகள் உட்பட பல்வேறு விவகாரங்களில் மதிப்புமிக்க கருத்துக்களை வழங்கினார்கள். ஜனநாயகத்தில் விவாதிப்பதும், வாதிடுவதும் இயல்பானவை.

ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகளுக்கும் இடம் உண்டு. நாங்களும் இதனை நம்புகிறோம். கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், பிரிந்து செல்லும் எங்களது சக ஊழியர்கள் பல்வேறு முக்கிய விவாதங்களை நடத்தினார்கள். இதற்காக நான் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.” என்றார்.

கட்சி பாகுபாடினின்றி அனைத்துக்கட்சியை சேர்ந்த எம்பிக்களும் ஓய்வு பெறும் உறுப்பினர்களின் பங்களிப்பை நினைவுகூர்ந்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து ஓய்வு பெறும் உறுப்பினர்கள் உரையாற்றி தங்களது நன்றியை தெரிவித்து பேசினர். மாநிலங்களவையில் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் திமுக எம்பி வில்சன் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* அன்புமணி ஆப்சென்ட்
மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அன்புமணி ராமதாஸின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் தனது பதவிக்காலத்தின் கடைசி நாளான நேற்று அவர் அவைக்கு வரவில்லை.

The post மாநிலங்களவையில் வைகோ அன்புமணி உட்பட 6 எம்பிக்கள் ஓய்வு appeared first on Dinakaran.

Related Stories: