வரதட்சணை கொடுமை செய்ததோடு மாமனார் பாலியல் டார்ச்சர்; பெண் தீக்குளித்து தற்கொலை: கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு

ராமநாதபுரம்: கமுதி அருகே கணவர் உட்பட குடும்பமே வரதட்சணை கொடுமை செய்ததோடு, மாமனாரின் பாலியல் தொந்தரவு காரணமாக இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே வீரமாச்சான்பட்டியையை சேர்ந்த முனீஸ்வரன் மனைவி ரஞ்சிதா (31). இவர்களுக்கு 12 வயதில் மகன், 11 வயதில் மகள் உள்ளனர். ரஞ்சிதாவிடம் கணவர் முனீஸ்வரன், மாமனார் அண்ணாத்துறை, மாமியார் சூரம்மாள் ஆகியோர், வரதட்சணையாக பணம், நகைகளை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளனர். மேலும், ரஞ்சிதாவிடம் மாமனார் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து கணவரிடம் கூறியும் அவர் கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சல் அடைந்த ரஞ்சிதா, நேற்று முன்தினம் இரவு மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அக்கம்பக்கத்தினர் உடலில் பரவிய தீயை அணைத்து, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்து மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிசைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சிதா இறந்தார். முன்னதாக சிகிச்சையில் இருந்து இறப்பதற்கு முன் ரஞ்சிதா பேசும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ‘தனது தற்கொலைக்கு காரணமானவர்கள் என, தனது கணவர் மற்றும் மாமனார், மாமியார்தான். மாமனார் தன்னை பின்னால் வந்து கட்டி பிடித்ததாகவும், இதனால் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டேன்’ என கூறி உள்ளார்.

இதனால் ரஞ்சிதா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டுமென ரஞ்சிதாவின் உறவினர்கள், மதுரை அரசு மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியதை தொடர்ந்து, உடலை பெற்று சென்றனர். இதுபற்றி ரஞ்சிதாவின் தந்தை பச்சமால், பெருநாழி காவல்நிலையத்தில் அளித்த புகாரில், ‘‘எனது மகள் ரஞ்சிதாவை பணம், தங்க நகை கேட்டு மருமகன் முனீஸ்வரன், அவரது தந்தை அண்ணாதுரை, தாய் சூரம்மாள் ஆகியோர் துன்புறுத்தியுள்ளனர். இதனால் ரஞ்சிதா மன உளைச்சலில் இருந்தார். யாரும் வீட்டில் இல்லாதபோது, மாமனார் அண்ணாதுரை, ரஞ்சிதாவிற்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனை பொறுக்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டார்’’ என புகார் அளித்தார்.

இதுகுறித்து பெருநாழி காவல்நிலையத்தில் கணவர் முனீஸ்வரன், மாமனார் அண்ணாதுரை,மாமியார் சூரம்மாள் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வரதட்சணை கொடுமை செய்ததோடு மாமனார் பாலியல் டார்ச்சர்; பெண் தீக்குளித்து தற்கொலை: கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: