இப்போட்டியில் வெற்றி பெற்று, தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. மாறாக, போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இங்கிலாந்து தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்திய ஆல் ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி, முழங்கால் காயம் காரணமாக இன்றைய போட்டியில் ஆட மாட்டார்.
இருப்பினும், மற்ற ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம். நிதிஷ் குமாருக்கு பதிலாக, அணியில் ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய பந்து வீச்சாளர்களில் ஆகாஷ் தீப்பிற்கு பதில், அன்சுல் கம்போஜ் அல்லது பிரசித் கிருஷ்ணா பயன்படுத்தப்படலாம். நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது சிராஜ் ஆகியோர் ஆடும் அணியில் கட்டாயம் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணியில் பெரியளவில் பலவீனமான அம்சங்கள் எதுவும் இல்லை. அந்த அணியில் காயமடைந்த ஷொயப் பஷீருக்கு பதில் லியாம் டாவ்சன் களமிறங்குவார். போட்டி நடக்கும் மான்செஸ்டரில் அவ்வப்போது மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், இன்று துவங்கும் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
* புதிய சகாப்தம் காண ரசிகர்கள் ஆர்வம்
மான்செஸ்டர் நகரில் இந்தியா இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளது. ஆனால், ஒரு போட்டியில் கூட வெற்றிக் கனியை பறிக்க முடியாத வகையில் இந்திய அணி மோசமான அனுபவங்களை சந்தித்துள்ளது. இங்கு ஆடியுள்ள போட்டிகளில் 4ல் தோல்விகளை சந்தித்துள்ள இந்தியா, 5ல் டிரா செய்துள்ளது. இன்று துவங்கும் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா வெற்றி பெற்று வரலாற்றை புரட்டிப் போடும் என்ற எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
* களம் காணும் வீரர்கள்
இந்திய அணி: சுப்மன் கில் ( கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன், விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜுரெல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், குல்தீப் யாதவ், அன்சுல் கம்போஜ்.
இங்கிலாந்து அணி: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப் (துணை கேப்டன்), ஜோ ரூட், ஹேரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), லியாம் டாவ்சன், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர்.
The post சுப்மன் கில் தலைமையில் அணிவகுப்பு: மான்செஸ்டரில் இந்தியா வான் புகழ் படைக்குமா? இங்கி.யுடன் இன்று 4வது டெஸ்ட் appeared first on Dinakaran.
