ஓசூர்: ஓசூரில் வாகன சோதனையின்போது, காரில் கடத்தி வந்த 824 ஜெலட்டின் குச்சிகள், 550 டெட்டனேட்டர்களை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் – ராயக்கோட்டை சாலையில் டவுன் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த காரை நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் அவரது காரை சோதனை செய்தனர். அதற்குள் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர் இருந்தது.
விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த அப்துல் லத்தீப் (41) என்பதும், உரிமம் இன்றி கம்ப்ரசர் வண்டிகள் மூலம் பாறைகளுக்கு வெடி வைக்கும் நபர்களுக்கு விற்பனை செய்வதற்காக ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்துல் லத்தீப்பை கைது செய்து காருடன் 824 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 550 டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
The post ஓசூரில் காரில் கடத்திய 824 ஜெலட்டின் குச்சிகள் 550 டெட்டனேட்டர் பறிமுதல்: டிரைவர் அதிரடி கைது appeared first on Dinakaran.
