கருவை கலைத்து, நகை, பணம், கார் அபகரிப்பு; சினிமா தயாரிப்பதாக கூறி 10 பெண்களை சீரழித்த வாலிபர்: கலெக்டர் அலுவலகத்தில் பெண் வக்கீல் புகார்

கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசூரை சேர்ந்த அனிதா(24) அளித்த புகார் மனு:
நான் கோவை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளேன். 2024ல் கரூர் நல்லிபாளையத்தை சேர்ந்த பார்த்திபன் (35) என்பவர் நேரில் சட்டரீதியாக சில சந்தேகங்களுக்காக அணுகினார். அப்போது எனது செல்போன் நம்பரை வாங்கிக்கொண்டார். அவர் கரூரில் வழக்கறிஞராக உள்ளதாகவும், நல்லிபாளையத்தில் பூர்வீக சொத்து 30 ஏக்கர் உள்ளதாகவும், ஒரு கோடி மதிப்பிலான வீடு உள்ளதாகவும், தாய் அரசுபள்ளி ஆசிரியர் எனவும், தந்தை பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார் எனவும் கூறினார். சிந்து என்பவரை திருமணம் செய்திருப்பதாகவும், மணவாழ்க்கையில் விரக்தியாக இருப்பதாகவும் கூறினார். மேலும், திருமணத்தால் அவர் வாழ்க்கை சீரழிந்துவிட்டதாகவும், உன்னை திருமணம் செய்ய ஆசைப்படுகிறான், நீ சம்மதித்தால், திருமணம் விஷயமாக உங்களது வீட்டில் பேசுகிறோம் என்று பார்த்திபனின் பெற்றோர் என்னிடம் கூறினர். நான் மறுத்துவிட்டேன்.

ஆனாலும், தொடர்ந்து பேசி எனது சம்மதத்தை பெற முயற்சி செய்தனர். இந்த சூழ்நிலையில் எனக்கும் பார்த்திபனுக்கும் காதல் ஏற்பட்டது. பார்த்திபன் வீட்டிற்கு நான் சென்றபோது, அவர் என்னிடம் அத்துமீறி பாலியல் உறவு வைத்தார். நான் அவரை கணவராக நினைத்து, அவருடன் வசித்தேன். அப்போதுதான் பார்த்திபன் பொள்ளாச்சியில் சினிமா படம் தயாரிப்பதாக கூறி பெண்களிடம் அத்துமீறிய விவகாரம் தெரியவந்தது. 18 வயதிற்கு குறைவான மைனர் பெண்ணுக்கு சினிமா வாய்ப்பு தருவதாக கூறி, அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தகவல் எனக்கு கிடைத்தது. பார்த்திபன் மீது பலாத்காரம், எஸ்சி-எஸ்டி வழக்கு, குண்டாஸ் உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிகிறது.

என்னிடமிருந்து அவர், 7 பவுன் நகை, ரூ.5 லட்சம் மற்றும் கார் வாங்கிக்கொண்டார். ஆனால், திருப்பி தரவில்லை. நான், கர்ப்பமாக இருந்தபோது ஸ்கேன் எடுக்க அழைத்துச்சென்று, கருக்கலைப்பு செய்து விட்டார். நான், பார்த்திபனை பிரிந்து, அவர் மீது போலீசில் புகார் அளித்தேன். அதன்பிறகு அவர், பின்தொடர்ந்து வந்து அச்சுறுத்தல் தருகிறார். மேலும் ஒரு நபர் கூட்டு சேர்ந்து என்னை டார்ச்சர் செய்கின்றனர். பார்த்திபன் 10க்கும் மேற்பட்ட பெண்களை நாசம் செய்திருப்பதாக தெரிகிறது. எனது உயிருக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் நடக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது நகை, பணம், காரை மீட்டுத்தர வேண்டும். எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

The post கருவை கலைத்து, நகை, பணம், கார் அபகரிப்பு; சினிமா தயாரிப்பதாக கூறி 10 பெண்களை சீரழித்த வாலிபர்: கலெக்டர் அலுவலகத்தில் பெண் வக்கீல் புகார் appeared first on Dinakaran.

Related Stories: