ஊத்துக்கோட்டையில் புனித அடைக்கல மாதா ஆலயம் தேர் திருவிழா

 

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில், புனித அடைக்கல மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 36ம் ஆண்டு தேர்பவனி திருவிழா கடந்த 16ம் தேதி திருவள்ளூர் சாலையில் இருந்து திருக்கொடியை ஊர்வலமாக எடுத்து வந்து கொடியோற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவிற்கு அடைக்கல மாதா ஆலய பங்கு தந்தை அலெக்ஸ் சகாயராஜ் தலைமை தாங்கினார்.

பாதிரியார்கள் அந்தோணிசாமி, அலெக்ஸ்ராஜ், அலெக்ஸ் தாஸ், ஆரோக்கிய வில்சன், ஆன்ட்ரூ, அருட்செல்வம், ஆகாஷ், ஜாஷ்பர், ஜெரால்ட், ராபின்ஸ்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி, தினமும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஜெபமாலை மற்றும் திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அடைக்கல மாதாவின் திருவுருவம் பொறித்த சிலை ஊர்வலம் பேண்டு வாத்தியங்கள் முழங்க கோலாகலமாக நடந்தது.

ரெட்டி தெரு, செட்டி தெரு, பஜார் வீதி, திருவள்ளூர் சாலை, அண்ணா நகர், நாகலாபுரம் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று ஆலயத்தை அடைந்தது. முன்னதாக, புனித அடைக்கல மாதா ஊர்வலத்தின் போது வழிநெடுகிலும் மக்கள் ஆர்வமுடன் பூ மாலைகள், கற்கண்டு, மெழுகுவர்த்தி ஆகியவைகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், துணைத்தலைவர் பால் செல்வகுமார், செயலாளர் அதரியான்ஸ், பொருளாளர் அந்தோணிராஜ் மற்றும் நிர்வாகிகள் பாக்கியராஜ், ராபர்ட், சேவியர், ஜான்சன், ஆல்பர்ட், கென்னடி, பிரைட்வின் மற்றும் சிறுவர்கள், சிறுமிகள், பெண்கள் மற்றும் அருட்சகோதரிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். தேர் திருவிழாவைத் தொடர்ந்து, கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைந்தது.

The post ஊத்துக்கோட்டையில் புனித அடைக்கல மாதா ஆலயம் தேர் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: