மாவட்டம் முழுவதும் மழையால் சேதமான சாலைகள் சீரமைப்பு

திருவள்ளூர், டிச.13: திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்கள், சேதங்கள் சீரமைப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை மற்றும் டிட்வா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியும், மழைநீர் கால்வாய்கள் அடைத்துக் கொண்டும், நெடுஞ்சாலைகளில் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டதாலும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனையடுத்து நெடுஞ்சாலைகள், கட்டுமானம் பராமரிப்பு துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு உத்தரவின்பேரிலும், மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் ஆலோசனையின்பேரிலும், நெடுஞ்சாலைத்துறை திருவள்ளூர் கோட்ட பொறியாளர் டி.சிற்றரசு மேற்பார்வையில், திருவள்ளூர் உதவி கோட்ட பொறியாளர் மதியழகன் தலைமையில் உதவி பொறியாளர்கள் அரவிந்தன், மகாலிங்கம் மற்றும் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் திருவள்ளூர் – ஆவடி நெடுஞ்சாலையில் காக்களூர் பகுதியில் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பள்ளங்கள் மற்றும் சேதங்களை ஜல்லி மற்றும் மண் கொட்டியும், தார் ஊற்றியும், செப்பனிட்டும், சீரமைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

அதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான திருமழிசை – திருவள்ளூர் நெடுஞ்சாலை மற்றும் திருவள்ளூர் ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்கள் மற்றும் சேதங்களை செப்பனிட்டு, சீரமைப்பு பணியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் தீவிரமாக மேற்கொண்டனர். மேலும், திருநின்றவூர் – பெரியபாளையம் நெடுஞ்சாலையில், சாலையோரம் தேங்கி இருந்த மழைநீரை அப்புறப்படுத்தி, மண் கொட்டி சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: