வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொடுமை; சஸ்பெண்ட் ஆன காவலர் கைது: கூடுதல் நகை கேட்கும் இன்ஸ்பெக்டரின் ஆடியோ வைரல்

மதுரை: மதுரையில் வரதட்சணை கேட்டு மனைவியை டார்ச்சர் செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் செந்தில்குமரன். இவரது மகன் பூபாலன். மதுரை அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் போலீசாக உள்ளார். இவருக்கும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 2017ல் திருமணம் நடந்தது. தற்போது கணவர் பூபாலன், அவரது தந்தை இன்ஸ்பெக்டர் செந்திகுமரன் மற்றும் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு டார்ச்சர் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கணவன் பூபாலன் கொடூரமாக தாக்கியதில் காயமடைந்த மனைவி மதுரை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகாரில் கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமரன், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகிய 4 பேர் மீது வரதட்சணை ெகாடுமை உள்ளிட்ட பிரிவுகளில் அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில் போலீஸ்கார் பூபாலன், வரதட்சனை கேட்டு மனைவியை தாக்கி கொடுமைப்படுத்தியதை தனது தங்கையிடம் சொல்லி மகிழ்ந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, போலீஸ்காரர் பூபாலன், அவரது தந்தையான போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் ஆகியோரை டிஐஜி அபிநவ்குமார் சஸ்பெண்ட் செய்துள்ளார். இதையடுத்து, தலைமறைவான போலீஸ்காரர் பூபாலனை திருப்பூரில் கைது செய்து சிறையில் அடைத்தனர். தந்தையான, இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், தாய் விஜயா, தங்கை அனிதா உள்பட குடும்பமே தலைமறைவாகியுள்ளனர். அவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். ஏற்கனவே பூபாலனும் அவரது சகோதரி அனிதாவும் பேசிய ஆடியோ வைரலானதை தொடர்ந்து இன்ஸ்பெக்டரான மாமனாரும், மருமகளும் பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது.

அதில், காது குத்துக்கு எங்கவீட்டில் ஒரு கிராமோ, 2 கிராமோ போடட்டும், அது அவங்க இஷ்டம் என்று மருமகள் கூற, மாமனார் கோபமாக, இத எப்படி ஏத்துக்குவ. என்ன பழக்கம். ஒரு கிராமை எப்படி ஏத்துக்குவ..? அவங்களுக்கு வசதி இல்லையா? என்று கூறுகிறார். மேலும், உனக்கு அவங்க என்னம்மா வாங்கிக் கொடுத்திருக்காங்க? என்று கேட்க, மருமகள், இந்த இரண்டரை வருசத்தில் எல்லாமே பண்ணியிருக்காங்க. என் பிள்ளைகளை படிக்க வைங்கன்னு கேட்டதற்கு படிக்க வைச்சிக்கிட்டு தான் இருக்காங்க என்கிறார்.

இதேபோல போலீஸ்காரர் பூபாலனிடம் அவரது தாயார் பின்னால செய்றேன் பின்னாலே செய்றேன்னு, என்னத்த கிழிக்கிறாங்க பின்னால, உன் பொண்டாட்டி… லேசுப்பட்டவள்னு நினைக்கிறீயா? முக்குறது, முனங்குறதுவரைக்கு சொல்லி இருப்பா… அப்பாவிடம் சொல்லி வைக்கிறேன். நல்லா பகுமானமா நல்ல வீடாப்பார்த்து உட்காரனமுன்னு நினைப்பு அவளுக்கு… வாடகையப் பத்தியெல்லாம் அவளுக்கு அக்கறை இல்லை என்கிறார்.

அதற்கு போலீஸ்காரர், வீடு கொஞ்சம் பழசா இருக்குங்கிறா அந்த வெண்ணை.. பெரிய வீடுதாம்மா… ஹால் பெருசா போட்டிருக்கான்… பெட்ரூம் கொஞ்சம் சின்னது, சமையல் ரூம் லிமிட்டா இருக்கு…’. இப்படி தாய் மகன் இடையே பேச்சு தொடர்கிறது. பல இடங்களில் பெண்ணை, அவரது தந்தையை இருவரும் ஆபாச வார்த்தைகளில் அர்ச்சிக்கின்றனர்.

The post வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொடுமை; சஸ்பெண்ட் ஆன காவலர் கைது: கூடுதல் நகை கேட்கும் இன்ஸ்பெக்டரின் ஆடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: