திட்டக்குடியில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு அதிரடி அகற்றம்

 

திட்டக்குடி, ஜூலை 19: திட்டக்குடியில் வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. கோயிலுக்கு சொந்தமாக 150 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளது. இந்நிலையில் கூத்தப்பன்குடிக்காடு பகுதியில் கோயிலுக்கு சொந்தமான இடத்தினை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியும், வால் பட்டறை, கடைகள் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கோயிலுக்கு சொந்தமான இடத்தை அகற்றி தருமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றாமல் இருந்து வந்தனர். இது சம்பந்தமாக அறநிலையத்துறை சார்பில் நீதிமன்றத்தை அணுகினர். நீதிமன்றம் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. அதன்பேரில் நேற்று உதவி ஆணையாளர் சந்திரன் தலைமையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. மேலும் அந்த இடத்தில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என பலகையும் வைக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பில் மீட்கப்பட்ட சொத்தின் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

ஆக்கிரமிப்பு பணியில் 30க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் திடீரென திட்டக்குடி – தொழுதூர் சாலையில் மறியல் செய்ய முயற்சித்தனர். அப்போது போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். செயல் அலுவலர் சிவப்பிரகாசம், தக்கார் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, தீயணைப்புத் துறையினர், மின்சாரம் துறையினர், கோயில் ஊழியர்கள் ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றுப்பணி இன்று நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post திட்டக்குடியில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு அதிரடி அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: