தனியார் கோயில் நிர்வாகியிடம் ரூ.1.50 லட்சம் லஞ்சம் பெண் அதிகாரி கைது

கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு பாத்தியப்பட்ட லட்சுமி அம்மன் கோயில் குல தெய்வ கோயில் உள்ளது. இதை தனி நபர்கள் பராமரித்து வந்தனர். இதன் ஆண்டு வருமானம் ரூ.40 லட்சமாக இருந்து வருகிறது.

கோயிலில் நிதி மேலாண்மை முறையாக இல்லை என்பதால் இந்த கோயிலை இந்து சமய அறநிலைய துறையின் கீழ் கொண்டு வர நிர்வாகிகளில் ஒருவரான ரத்தினபுரியை சேர்ந்த சுரேஷ்குமார் (52), இந்து சமய அறநிலையத் துறைக்கு மனு அளித்திருந்தார். சென்னை உயர்நீதிமன்றமும் இது தொடர்பாக 12 வாரங்களில் நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் சுரேஷ்குமார் மனு மீது நடவடிக்கை எடுத்து, கோயிலை இந்து சமய அறநிலைய துறையின் கீழ் கொண்டு வருவதற்கு ரூ.3 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என உதவி கமிஷனர் இந்திரா (54) கேட்டுள்ளார். பேரம் பேசி முடிவாக ரூ.1.50 லட்சம் தருமாறு இந்திரா கேட்டுள்ளார்.

இதை நேற்று முன்தினம் இரவு கோவை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் அருகில் உள்ள பாரதியார் சாலையில் இந்திராவிடம் சுரேஷ்குமார் கொடுத்து உள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்திராவை கைது செய்தனர். விசாரணைக்கு பின், நேற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

The post தனியார் கோயில் நிர்வாகியிடம் ரூ.1.50 லட்சம் லஞ்சம் பெண் அதிகாரி கைது appeared first on Dinakaran.

Related Stories: