ஜூரிச்: யூரோ கோப்பை மகளிர் காலிறுதியில் சுவீடன் அணியை இங்கிலாந்து அணி வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான 14வது யுரோ கோப்பை மகளிர் கால்பந்து போட்டி சுவிட்சர்லாந்தில் நடக்கிறது. ஜூரிச்சில் நேற்று நடந்த காலிறுதியில் முன்னாள் சாம்பியன் சுவீடன், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 2வது நிமிடத்திலேயே கேப்டன் கோசோவரே அஸ்லானி கோலடித்து சுவீடன் அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். தொடர்ந்து 25வது நிமிடத்தில் மற்றொரு சுவீடன் வீராங்கனை ஸ்டினா பிளாக்ஸ்டீனியஸ் கோலடித்து அணியின் முன்னிலையை அதிகரித்தார்.
முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் சுவீடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. அதன்பிறகு 2வது பாதியிலும் இரு அணிகளும் கோலடிக்க முட்டி மோதின. ஆட்டம் முடிய சுமார் 10 நிமிடங்கள் இருந்த நிலையில் இங்கிலாந்துக்கு பலன் கிடைத்தது. அந்த அணியின் லூசி பிரோன்ஸ் 79வது நிமிடத்திலும், பதிலி ஆட்டக்காரர் மிட்செல் அகேமாங் 81வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோலடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டுவந்தனர். ஆட்டத்தின் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. அதன் பிறகு கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிடங்களிலும் எந்த அணியாலும் கோல் எண்ணிக்கையை உயர்த்த முடியவில்லை.
பின்னர் நடந்த ‘பெனால்டி ஷூட் அவுட்’டில் இரு அணிகளுக்கும் கோலடிக்க தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அவற்றில் இரு அணிகளும் தலா 2 கோல்களை அடித்து மீண்டும் சமநிலை பெற்றன. அதன் பிறகு ‘சடன் டெத்’ முறையில் வழங்கப்பட்ட 2 வாய்ப்புகளில் சுவீடன் 2 வாய்ப்புகளையும் தவற விட்டது. பின்னர், இங்கிலாந்து முதல் வாய்ப்பை தவற விட்டாலும் 2வது வாய்ப்பை லூசி பிரோன்ஸ் சரியாக பயன்படுத்த அந்த அணி முன்னிலை பெற்றது. அதனால் இங்கிலாந்து 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தொடர்ந்து 3வது முறையாக ஹாட்ரிக் அரையிறுதிக்கு முன்னேறியது.
The post யுரோ கோப்பை மகளிர் கால்பந்து; திக்… திக்… போட்டியில் அசத்திய இங்கிலாந்து: சுவீடனை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.
