இதில் முதல் மற்றும் 3வது டெஸ்ட்டில் பும்ரா ஆடிவிட்டார். இதனால் அவர் கடைசி 2 டெஸ்ட்டில் எந்த போட்டியில் ஆடுவார் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் 4வது டெஸ்ட் `டூ-ஆர்-டை’ என்ற நிலையில் இருப்பதால் பும்ராவை ஆட வைக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 3வது டெஸ்ட் முடிந்து 4வது டெஸ்டிற்கு இடையே ஒருவாரம் ஓய்வு இருப்பதும் சாதகமாக அமைந்துள்ளது. இந்த தொடரில் பும்ரா 2 டெஸ்ட்டில் 12 விக்கெட் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே 4வது டெஸ்ட் கருண் நாயருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என தகவல் வெளியாகி இருக்கிறது. 7 ஆண்டுக்கு பின் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்ட கருண் நாயர், 3 டெஸ்ட்டில் வாய்ப்பு அளித்தும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. 6 இன்னிங்சில் அவர் 131 ரன்களே எடுத்துள்ளார். இதனால் தமிழகத்தைச் சேர்ந்த சாய்சுதர்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
லார்ட்ஸ் டெஸ்ட்டில் பும்ரா வீசிய வைடு பந்தை பிடிக்க முயன்றபோது விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட்டிற்கு இடது கையின் ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அதன்பின்னர் கீப்பிங் செய்யவில்லை. அவருக்கு பதிலாக 2 இன்னிங்சிலும் துருவ் ஜூரல் கீப்பிங் செய்தார். இந்நிலையில் பன்ட்டின் காயம் குணமாகி வருவதால் அவர் மான்செஸ்டர் டெஸ்ட்டில் ஆட உள்ளார். ஒருவேளை அவர் கீப்பராக இல்லாவிட்டாலும் பேட்டராக களம் இறங்குவார். கருண் நாயருக்கு பதிலாக துருவ் ஜூரலை களம் இறக்கி விக்கெட் கீப்பராக செயல்பட வைக்கவும் வாய்ப்பு உள்ளது.
கே.எல்.ராகுல் எங்கே?
2 நாள் ஓய்வுக்கு பின்னர் நேற்று, கென்ட் கவுண்டி கிரிக்கெட் கிளப் மைதானத்தில் உள்ள பெக்கன்ஹாமில் இந்திய வீரர்கள் பயிற்சியை தொடங்கினர். ஆனால் கே.எல்.ராகுல் மட்டும் பயிற்சியில் பங்கேற்க வில்லை. அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இன்றும் பயிற்சியில் ஈடுபடும் இந்திய அணி நாளை மான்செஸ்டருக்கு புறப்படும்.
அர்ஷ்தீப் சிங் காயம்;
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இடது கை வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. 4வது டெஸ்ட்டில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று அர்ஷ்தீப் சிங் வலை பயிற்சியின் போது சாய்சுதர்சன் அடித்த பந்தை தடுத்தபோது அவரது இடது கை விரலில் ரத்த காயம் ஏற்பட்டது. இந்த காயம் தையல் போடும் அளவுக்கு இருப்பதாக தெரிகிறது. 4வது டெஸ்ட்டில் அவர் சேர்க்கப்படலாம் என தகவல் வெளிவந்த நிலையில், அவரின் காயம் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
முகமது சிராஜூக்கு ஓய்வா?
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 3 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 109 ஓவர் வீசி உள்ளார். இதில் 13 விக்கெட் எடுத்து டாப்பில் உள்ளார். பணிச்சுமை காரணமாக அவருக்கு 4வது டெஸ்ட்டில் ஓய்வு அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி உதவி பயிற்சியாளர் டென் டோஷேட் கூறுகையில், “இது ஒரு நீண்ட சுற்றுப்பயணம், பும்ராவின் பணிச்சுமை பற்றி நிறைய பேச்சுக்கள் உள்ளன. ஆனால் சிராஜையும் நாம் நிர்வகிக்க வேண்டும். அவரைப் போன்ற ஒருவரைப் பெற்றிருப்பது நமக்கு எவ்வளவு அதிர்ஷ்டம் என்பதை நாம் பெரும்பாலும் சாதாரணமாகவே கருதுகிறோம் என்று நினைக்கிறேன். அவர் கையில் பந்தை வைத்திருக்கும் ஒவ்வொரு முறையும், ஏதோ நடக்கும் என்று தோன்றுகிறது’’ என்றார்.
The post `டூ-ஆர்-டை’ போட்டி என்பதால் 4வது டெஸ்ட்டில் பும்ரா களம் இறங்குகிறார்: கருணுக்கு கல்தா; துருவ் ஜூரல் அல்லது சுதர்சனுக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.
