ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை: 34 வயதில் சாதனை ; ஜோ ரூட் மீண்டும் நம்பர் 1

லண்டன்: ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்டிங் தர வரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அதிரடி வீரர் ஜோ ரூட் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், நேற்று, ஐசிசி டெஸ்ட் போட்டி பேட்டிங் தரவரிசை பட்டியல் வெளியானது. அதில், இங்கிலாந்து அதிரடி வீரர் ஜோ ரூட் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இலங்கை வீரர் குமார் சங்கக்கராவுக்கு பின், அதிக வயதில் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடிக்கும் வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றுள்ளார். கடந்த 2014ல் சங்கக்கரா பேட்டிங் தர வரிசையில் முதலிடம் பிடித்தபோது அவருக்கு வயது 37. டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் நியுசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் ஒரு நிலை உயர்ந்து 2ம் இடத்தை பிடித்தார்.

முதலிடத்தில் இருந்த இங்கிலாந்தின் ஹேரி புரூக் 2 நிலை தாழ்ந்த 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். அதேபோல், இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4ம் இடத்தில் இருந்து 5ம் இடத்துக்கும், ரிஷப் பண்ட் 7ம் இடத்தில் இருந்து 8ம் இடத்துக்கும் தள்ளப்பட்டனர். இந்திய கேப்டன் சுப்மன் கில் 3 நிலை தாழ்ந்து 9ம் இடத்துக்கு சென்றுள்ளார். 3வது டெஸ்டின் 2வது இன்னிங்சில் மிக சிறப்பாக ஆடிய இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா, 5 நிலை உயர்ந்து 34ம் இடத்தையும், கே.எல்.ராகுல் 5 நிலை உயர்ந்து 35ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

The post ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை: 34 வயதில் சாதனை ; ஜோ ரூட் மீண்டும் நம்பர் 1 appeared first on Dinakaran.

Related Stories: