மும்பை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கர்நாடக அமைச்சரின் நெருங்கிய உதவியாளரை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்தனர். கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருவதாகவும், இதில் அரசியல் தலைவர்களின் உதவியாளர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பெயர்கள் அடிபடுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில், கடந்த சில நாட்களாக போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக மும்பை, சாங்க்லி உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 12ம் தேதி மும்பை காவல்துறை, சிபிஐ மற்றும் இன்டர்போல் இணைந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பதுங்கியிருந்த போதைப்பொருள் சப்ளையரான முஸ்தஃபா முகமது குபாவாலாவை கைது செய்து மும்பைக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில் கர்நாடக மாநில அமைச்சரும், காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் மகனுமான பிரியங்க் கார்கேயின் நெருங்கிய உதவியாளரும், கலபுர்கி தெற்கு பகுதி காங்கிரஸ் கட்சியின் தலைவருமான லிங்கராஜ் கன்னி, மகாராஷ்டிராவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பலரின் பெயர்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
The post போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கர்நாடக அமைச்சரின் உதவியாளர் கைது: மகாராஷ்டிரா போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.
