மெஸ்ஸி நிகழ்ச்சியில் களேபரம் ரசிகர்களால் மைதானம் போர்க்களம்: 20 நிமிடத்தில் வெளியேறிய கால்பந்து சூப்பர்ஸ்டார்

கொல்கத்தா: கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில், அர்ஜென்டினா கால்பந்து சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸியை சரிவர பார்க்க முடியாத ஆத்திரத்தில், ரசிகர்கள் பயங்கர களேபரத்தில் ஈடுபட்டதால், அப்பகுதி போர்க்களமானது. கடந்த 2022ல் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி. இவர், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கால்பந்தாட்ட ரசிகர்களால் சூப்பர் ஸ்டாராக மதிக்கப்படும் மாபெரும் வீரர்.

தற்போது, கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (கோட்) என்ற பெயரில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்காக, பல்வேறு நாடுகளில் மெஸ்ஸி சுற்றுப்பயணம் செய்து ரசிகர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில், இந்தியாவில் கொல்கத்தா, டெல்லி, மும்பை, ஐதராபாத் நகரங்களுக்கு மெஸ்ஸி வருகை தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், முதற்கட்டமாக கொல்கத்தாவுக்கு வருகை தந்துள்ள மெஸ்ஸி, அங்குள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடக்கவிருந்த நிகழ்ச்சிக்காக காலை 11:15 மணிக்கு சென்றார்.

மேடையில் அவர் தோன்றியதும், அவரை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் ஏராளமாக திரண்டிருந்த கால்பந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மேடையில், மெஸ்ஸியை சுற்றிலும் பாதுகாவலர்களும், அரசியல் மற்றும் உள்ளூர் பிரபலங்களும் நிரம்பி வழிந்தனர். மேடைக்கு மெஸ்ஸி வந்தும் அவரை பார்க்க விடாமல் செய்தவர்களை கண்டு மைதான கேலரிகளில் அமர்ந்திருந்த ரசிகர்கள் ஆத்திரத்தில் கூச்சலிட்டனர்.

அதன் பின்னரும் மெஸ்ஸியை சுற்றி நின்ற பிரபலங்கள் கூட்டம் நகராததால், ரசிகர்கள், கையில் இருந்த பாட்டில்களை மைதானத்தில் வீசினர். நாற்காலிகளை உடைத்து வீசியெறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆவேசத்தில் கொந்தளித்து களேபரத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். ஒரு கட்டத்தில் நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதை உணர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக, மெஸ்ஸியை அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

மெஸ்ஸி, சால்ட் லேக் மைதான மேடையில் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே இருந்தார். அந்த சமயத்தில் காணொளி வாயிலாக, கொல்கத்தா நகரில் தனக்காக அமைக்கப்பட்டிருந்த 70 அடி உயர சிலையை மெஸ்ஸி திறந்து வைத்தார். அதன் பின் நிகழ்ந்த சம்பவங்கள் கொல்கத்தா கால்பந்து வரலாற்றில் கரும்புள்ளியாக அமைந்துள்ளதாக, கால்பந்து ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

* ரசிகர்கள் ஆவேசம்
மெஸ்ஸி நிகழ்ச்சியை பார்க்க வந்திருந்த ரசிகர்கள் கூறுகையில், ‘எங்கள் கனவு நாயகன் மெஸ்ஸியை காண, 5,000 முதல் 20,000 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் செலுத்தி நாங்கள் வந்துள்ளோம். ஆனால், அவரை பார்க்க விடாமல், உள்ளூர் அரசியல்வாதிகளும் பாதுகாவலர்களும் செய்து விட்டனர். அரசியல்வாதிகளை பார்க்கவா நாங்கள் இங்கு வந்தோம்’ என ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினர்.

Related Stories: