புதுச்சேரி: ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு இல்லாத நிலையிலும் தமிழகத்தில் மகத்தான ஆட்சி நடைபெற்று மாநிலத்தில் 16 சதவீதம் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது. புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி மலரும், என தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநில திமுக வாக்குச்சாவடி பாக முகவர்கள் பயிற்சி கூட்டம் கம்பன் கலையரங்கில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு தொழில்துறை அமைச்சரும், திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளருமான டிஆர்பி ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
உலகமே ஏற்கக் கூடிய அளவுக்கு தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறமையான நிர்வாகத்தால் ஆட்சியை வழிநடத்தி வருகிறார். 2011ம் ஆண்டு கலைஞர் ஆட்சிக் காலத்தில் 13 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, கொரோனா பேரிடரையும் தாண்டி, ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு இல்லாத நிலையிலும் இன்று 16 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. இதற்கான ஆதாரங்களை ஒன்றிய அரசே வழங்கி உள்ளது.
திராவிட மாடல் நாயகனின் ஆட்சி புதுச்சேரியிலும் மலர வேண்டும் என்பது எங்களுடைய கருத்து மட்டும் அல்ல, ஒட்டுமொத்த மக்கள் மற்றும் பெண்களுடைய விருப்பமும் அதுதான். புதுச்சேரியில் ஆக்கப்பூர்வமான ஆரோக்கியமான வளர்ச்சி சார்ந்த அரசு வரவேண்டும் என்பதுதான் திமுகவின் எண்ணம். தமிழகத்தில் 10 ஆண்டு காலம் எந்த ஒரு வளர்ச்சியும் கிடையாது. அதையும் மீறி தற்போது தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக வளர்ந்து வருகிறது.
புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன், விடியல் பயணம் போன்ற திட்டங்கள் புதுச்சேரியிலும் வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். சுற்றுலாவை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. புதுச்சேரியில் என்னென்ன தொழில்கள் செய்தால் மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியுமோ அதற்கு ஏற்றது போல் தொழில் வளர்ச்சி உருவாக்கப்படும். விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும்.
தமிழ்நாடு வளர்ச்சியை புதுச்சேரியிலும் கொண்டு வர வேண்டும் என்பதுதான் திராவிட மாடலின் எண்ணமாக உள்ளது. எந்த ஆட்சியாக இருந்தாலும் நம்பர் ஒன் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி தான். அந்த ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்று மக்கள் முடிவு செய்து இருக்கிறார்கள். புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி மலரும். இவ்வாறு அவர் கூறினார்.
