ஆம்னி பஸ்சில் ரூ.33 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது: சென்னையை சேர்ந்தவர்களிடம் விசாரணை

ஒரத்தநாடு: சென்னையில் இருந்து ஆம்னி பஸ்சில் ஒரத்தநாட்டுக்கு ரூ.33 லட்சம் ஹவாலா பணத்துடன் வந்த 2 பேர் பிடிபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தாடு பகுதிக்கு, தனியார் ஆம்னி பஸ்சில், போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதன் பேரில், ஒரத்தநாடு போலீசார் வல்லம் சாலையில் நேற்று அதிகாலை முதல் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சென்னையில் இருந்து வந்த ஆம்னி பஸ்சை சோதனை செய்தனர். ஆனால் போதை பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும், பஸ்சில் இருந்து சந்தேகப்படும்படி இறங்கிய 2 நபர்களிடம் போலீசார் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். சோதனையில் அவர்கள் வைத்திருந்த பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் ஒரத்தநாடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், சென்னை ராயபுரத்தை சேர்ந்த சையத் அலாவுதீன்(46), பாரிஸ் பகுதியை சேர்ந்த ஜாபர் அலி(51) என்பதும், சென்னை பாரிஸ் பகுதியில் மொபைல் கடை நடத்தி வரும் இருவரும், வெளிநாடுகளில் இருந்து ஹாவாலா பணத்தை விநியோகம் செய்வதை தொழிலாக செய்து வருவதும், ஒரத்தநாடு பகுதியில் உள்ள ஒருவரிடம் ரூ.33.04 லட்சம் ஒப்படைக்க எடுத்து வந்ததும் தெரிய வந்தது.

அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்து, திருச்சி வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். வருமானவரிதுறை அதிகாரிகள் வந்து சையத் அலாவுதீன் மற்றும் ஜாபர் அலி ஆகிய இருவரையும் விசாரணைக்காக திருச்சி அழைத்து சென்றனர்.

The post ஆம்னி பஸ்சில் ரூ.33 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது: சென்னையை சேர்ந்தவர்களிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: