கே.எல்.ராகுல் 53, ரிஷப் பன்ட் 19 ரன்னில் 3வது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்தனர். இதனிடையே நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் பும்ரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சிறப்பு வாய்ந்த லார்ட்ஸில் 5 விக்கெட் வீழ்த்தியபோது உற்சாகத்துடன் ஏன் கொண்டாட வில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “உண்மை என்னவென்றால், நான் சோர்வாக இருந்தேன். மகிழ்ச்சியான காரணி எதுவும் இல்லை. நான் மைதானத்தில் நீண்ட நேரம் பந்துவீசினேன், சில சமயங்களில் நான் சோர்வடைந்து விடுவேன். மேலும் நான் இப்போது குதித்து விளையாடும் அளவுக்கு 21-22 வயதுடையவன் அல்ல. நான் வழக்கமாக அப்படி இருப்பதில்லை. நான் பங்களித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். அதைத் தவிர, என் இலக்குக்குத் திரும்பி அடுத்த பந்தை வீச விரும்பினேன்’’ என்றார். நேற்று காலை 10 ஓவர் மட்டுமே வீசப்பட்ட நிலையில் பந்தின் வடிவம் மாறியதால் அதை மாற்ற நடுவர்களிடம் கில் வலியுறுத்தினார்.
அம்பயர்கள் பந்தைச் சோதனை செய்து, அது தகுதியற்றது எனக் கண்டறியப்பட்டு மாற்றுப் பந்து வழங்கப்பட்டது. ஆனால், அந்த மாற்றுப் பந்தின் நிலையும் திருப்திகரமாக இல்லை என்று கூறி, கேப்டன் சுப்மன் கில் அம்பயருடன் ஆவேசமாக விவாதித்தார். இதுபோல் ஸ்டம்ப் மைக்கில் பேசிய சிராஜ், “இது 10 ஓவர் பழைய பந்தா? உண்மையாகவா?’’ என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதுபற்றிய கேள்விக்கு பதில் அளித்த பும்ரா, “நான் மிகவும் கடினமாக உழைக்கிறேன். நிறைய ஓவர்கள் வீசுகிறேன். எனவே நான் எந்த சர்ச்சைக்குரிய நடவடிக்கைக்கு செல்ல விரும்பவில்லை. எனது போட்டி கட்டணத்தை இழக்கவும் விரும்பவில்லை. ஆனால் பந்து மாற்றம் சில நேரங்களில் நமக்கு சாதகமாக இருக்கலாம். சில நேரங்களில் மோசமான பந்து கிடைக்கும்’’ என்றார்.
The post லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட் வீழ்த்தியபோது; துள்ளி குதித்து கொண்டாட நான் 22 வயதுடையவன் அல்ல: இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பேட்டி appeared first on Dinakaran.
