லண்டன்: இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 387 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3வது டெஸ்ட், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழந்து 251 ரன் எடுத்திருந்தது. 2வது நாளான நேற்று முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணி, இந்திய நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் துல்லிய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 112.3 ஓவரில், இங்கிலாந்து 387 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. இந்தியா தரப்பில் பும்ரா 5, முகம்மது சிராஜ் 2, நிதிஷ் குமார் ரெட்டி 2, ரவீந்திர ஜடஜோ 1 விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது.
* சாதனைன்னா பிராட்மேன்… முறியடிப்பாரா சுப்மன்?
இங்கிலாந்து அணியுடனான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய கேப்டன் சுப்மன் கில் அசத்தலாக ஆடி 3 சதங்களை விளாசி 585 ரன்களை எடுத்துள்ளார். இன்னும் 225 ரன்கள் எடுத்தால், ஆஸ்திரேலியா பழம்பெரும் கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன், கேப்டனாக எடுத்த அதிபட்ச ஸ்கோரான 810ஐ கில் கடப்பார். கடந்த 1930ல் நடந்த ஆஷஷ் தொடரில் பிராட்மேன் 974 ரன்களை குவித்தார். அந்த சாதனையை தகர்க்க கில்லுக்கு இன்னும் 390 ரன் தேவை. தவிர, ஒரு கேப்டனாக, 11 இன்னிங்ஸ்கள் ஆடி, 1000 ரன் குவித்த ஒரே வீரர் பிராட்மேன் மட்டுமே. கில் இன்னும் 415 ரன் எடுத்தால் அந்த சாதனையையும் முறியடிக்கலாம்.
The post 3வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா வேகத்தில் மிரண்ட இங்கிலாந்து: 387 ரன்னுக்கு ஆல்அவுட் appeared first on Dinakaran.