எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை அகில இந்திய ஹாக்கி போட்டி சென்னையில் இன்று துவக்கம்: மலேசியா உட்பட 10 அணிகள் பங்கேற்பு

சென்னை: நாட்டின் பிரபல ஹாக்கித் தொடரான, 96வது எம்சிசி – முருகப்பா தங்கக் கோப்பை அகில இந்திய ஹாக்கி போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. இந்தப் போட்டி சென்னை எழும்பூர் ஹாக்கி அரங்கில் ஜூலை 20ம் தேதி வரை நடைபெறும். இந்தப் போட்டியில் ரயில்வே, ராணுவம், தமிழ்நாடு உட்பட 10 அணிகள் 2 பிரிவாக களம் காணும். உள்ளூர் அணிகளை தவிர முதல் முறையாக ஒரு வெளிநாட்டு அணியும் கலந்து கொள்கிறது.

இந்த ஆண்டு நவ.28 முதல் டிச.10ம் தேதி வரை இளையோர் உலக கோப்பை ஹாக்கிப் போட்டி நடைபெற உள்ளது. அந்தப்போட்டியில் பங்கேற்க உள்ள மலேசிய இளையோர் ஹாக்கி அணி தங்களை தயார் செய்துக் கொள்ள வசதியாக முருகப்பா கோப்பையில் விளையாட உள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் 7 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ரூ. 5 லட்சம், அரையிறுதி வரை முன்னேறும் அணிகளுக்கு தலா ரூ. 50 ஆயிரம் பரிசளிக்கப்படும்.

சிறந்த வீரர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும், நவீன வசதிகளுடனான சைக்கிள்களும் வழங்கப்படும். இன்று மாலை நடக்கும் தொடக்க விழாவை தொடர்ந்து நடைபெறும் முதல் ஆட்டத்தில் மகாராஷ்டிரா – தமிழ்நாடு அணிகள் மோத உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை போட்டியை நடத்தி வரும் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் (எம்சிசி), முருகப்பா தொழில் குழுமம் செய்துள்ளன.

The post எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை அகில இந்திய ஹாக்கி போட்டி சென்னையில் இன்று துவக்கம்: மலேசியா உட்பட 10 அணிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: