இந்தியா இங்கிலாந்து மோதல் லார்ட்ஸ் அரங்கில் யார் கிங்? 3வது டெஸ்ட் இன்று துவக்கம்

லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே லண்டன் லார்ட்ஸ் அரங்கில் இன்று 3வது டெஸ்ட் போட்டி துவங்குகிறது.  இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. அதற்கு பதிலடி தரும் வகையில் பிர்மிங்காமில் நடந்த 2வது டெஸ்டில் 336 ரன் வித்தியாசத்தில் வென்று, இந்தியா வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. அதனால் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

இந்நிலையில் 3வது டெஸ்ட், இன்று புகழ் பெற்ற லண்டன் லார்ட்ஸ் அரங்கில் தொடங்குகிறது. இந்திய அணியை போலவே பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியும் குறைத்து மதிப்பிட முடியாத அதிரடி அணியாகவே உள்ளது. வெற்றியோ, தோல்வியோ இரு அணிகளும் போராடிதான் பெற்றுள்ளன. அதனால் இன்றைய ஆட்டமும் அதே போராட்ட போக்கில்தான் இருக்கும். அதனால் இன்று களம் காணப் போகும் ஆடும் அணிகளில் பெரிய மாற்றமிருக்காது. பும்ரா மீண்டும் களம் காண்பது அணிக்கு கூடுதல் பலம். எனவே அவருக்காக நிதிஷ்குமார் வெளியில் உட்கார வைக்கப்படலாம்.

சுமார் நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் அணியில் இணைந்துள்ள ஜோப்ரா ஆர்ச்சருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்நிலையில் இன்னொரு வேகம், கஸ் அட்கின்சன் புதிதாக அணியில் இணைந்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு வெற்றியை வசப்படுத்தி உள்ள இந்தியாவுக்கு மட்டுமின்றி, பர்மிங்காமில் முதல் முறையாக இந்தியாவிடம் தோற்றுள்ள இங்கிலாந்துக்கும் வெற்றி அவசியம். அந்த வெற்றியை பெறும் அணி தொடரில் முன்னிலை பெறும்.

* அணி விவரம்
இங்கிலாந்து: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஹாரி புரூக், பென் டக்கெட், ஜாக் கிரவ்லி, ஜேகப் பெதேல், ஆலிவர் போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரெய்டன் கார்ஸ், ஜோஷ் டங், ஜோப்ரா ஆர்ச்சர், ஷொயப் பஷீர், ஜேமி ஓவர்டன், சாம் ஜேம்ஸ் குக், கஸ் அட்கின்சன்.

* இந்தியா: சுப்மன் கில் (கேப்டன்), கே.எல்.ராகுல், அபிமன்யூ ஈஸ்வரன், சாய் சுதர்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், நிதிஷ்குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ரிஷப் பண்ட், துருவ் ஜுரெல், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.

* நேருக்கு நேர்
* லண்டன் லார்ட்ஸ் அரங்கில் இந்தியா இதுவரை 19 டெஸ்ட்களில் விளையாடி உள்ளது.
* அவற்றில் 3 டெஸ்ட்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள இந்தியா 12 டெஸ்ட்களில் தோல்வியை சந்தித்துள்ளது. எஞ்சிய 4 டெஸ்ட்கள் டிராவில் முடிந்துள்ளன.
* லார்ட்ஸ் அரங்கில் இங்கிலாந்து உடன் மட்டுமின்றி நியுசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுடனும் இந்தியா மோதியுள்ளது.
* ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டங்களான (2021, 2023) ஆகியவற்றில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது.
* இதுவரை நடந்த 3 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இறுதி ஆட்டங்களும் லார்ட்ஸ் அரங்கில் தான் நடந்துள்ளன.
* அவற்றில் ஒருமுறை கூட உள்ளூர் அணியான இங்கிலாந்து விளையாடியதில்லை.
* லார்ட்ஸ் அரங்கில் இங்கிலாந்து இதுவரை 145 டெஸ்ட்களில் களம் கண்டுள்ளது.
* அவற்றில் 59 டெஸ்ட்களில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 35 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தாலும், 51 ஆட்டங்களில் டிரா செய்துள்ளது.

The post இந்தியா இங்கிலாந்து மோதல் லார்ட்ஸ் அரங்கில் யார் கிங்? 3வது டெஸ்ட் இன்று துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: