கடலூர் ரயில் விபத்தில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் கேட் கீப்பர், ஸ்டேஷன் மாஸ்டர் உள்பட 13 பேருக்கு சம்மன்: விசாரணையை தொடங்கியது ரயில்வே

கடலூர்: கடலூர் ரயில் விபத்தில் 3 மாணவர்கள் பலியான சம்பவத்தில் கேட் கீப்பர், ஸ்டேஷன் மாஸ்டர் உள்பட 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக ரயில்வே விசாரணையை தொடங்கி உள்ளது.
கடலூர் முதுநகர் செம்மங்குப்பத்தில் நேற்று முன்தினம் ரயில்வே கேட்டை கடக்கும்போது பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் பள்ளி மாணவர்களான தொண்டமாநத்தம் நிமலேஷ் (12), காட்டுசாகை சாருமதி (16), செழியன் (15) ஆகியோர் இறந்தனர். இறந்த நிமலேஷின் சகோதரர் விஸ்வேஷ் (16), வேன் டிரைவர் சங்கர் (47) மற்றும் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முயன்ற செம்மங்குப்பம் கூலி தொழிலாளி அண்ணாதுரை (55) உள்ளிட்ட 3 பேர் காயமடைந்து கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், விபத்து நடந்த இடத்தில் கேட் கீப்பராக இருந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த பங்கஜ் சர்மா கேட்டை மூடாமல் தூங்கியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரயில்வே போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். ரயில்வே விதியை மீறியதால் அவரை சஸ்பெண்ட் செய்து தெற்கு ரயில்வே அறிவித்தது. இந்த விபத்து தொடர்பாக திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகளும், திருச்சி ரயில்வே காவல் துறையினரும் தனித்தனியே தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு அலுவலகம் சார்பில் துணை பாதுகாப்பு அலுவலர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு விசாரணையை நேற்று தொடங்கி உள்ளது. அதில், விபத்தை ஏற்படுத்திய விழுப்புரம்- மயிலாடுதுறை ரயில் எத்தனை மணிக்கு கடலூர் ரயில் நிலையத்தை கடந்தது, பணியில் கேட் கீப்பர் இருந்தாரா, கேட் மூடப்பட்டிருந்ததா, விபத்து நடந்ததும் எத்தனை மணிக்கு தகவல் வந்தது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பியதாக தெரிகிறது. ஒவ்வொருவரிடம் அவரவர் பணிகள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு விளக்கம் கோரப்பட உள்ளது.

இதன் அடிப்படையில் தவறு செய்த ஸ்டேஷன் மாஸ்டர்கள், ஊழியர்கள் மீதும் ரயில்வே நிர்வாகம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என தெரிகிறது. விசாரணைக்காக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, ஸ்டேஷன் மாஸ்டர்களான அஜித்குமார், விமல், அங்கித்குமார், ரயில்வே ஊழியர்களான சக்திகுமார், ரஞ்சித் மீனா, விக்ராந்த் சிங், ஆனந்த், வடிவேலன், வாசுதேவ பிரசாத், சிவக்குமாரன், ராஜசேகரன் மற்றும் தனியார் பள்ளி வேன் டிரைவர் சங்கர் ஆகிய பேருக்கு உடனே (நேற்று) ஆஜராக சம்மன் அனுப்பட்டு இருந்தது. ஆனால் யாரும் விசாரணைக்கு நேற்று ஆஜராகவில்லை.

* தமிழகத்தை சேர்ந்தவர் கேட் கீப்பராக நியமனம்
தமிழகத்தில் மொழி தெரியாத வட மாநிலத்தவரை கேட் கீப்பராக ஒன்றிய அரசு நியமித்ததால்தான் விபத்து நடந்ததாக அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டன. இதன் எதிரொலியாக ரயில் விபத்து நடந்த செம்மகுப்பம் ரயில்வே கேட்டுக்கு உடனடியாக புதிய கீப்பர் நியமிக்கப்பட்டார். தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் நேற்று காலை அங்கு தனது பணியை தொடங்கினார். இவர் திருத்தணியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* உண்மை கண்டறியும் குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு
முதன்மை தலைமை நிலைய அதிகாரி கணேஷ் தலைமையில் 6 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவினர் விபத்து நடைபெற்ற கடலூர் அருகே உள்ள செம்மங்குப்பம் பகுதியில் நேற்று மாலை நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள வீடுகளுக்கு சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தினர். இரு சக்கர வாகனத்தில் வந்த பொதுமக்களிடமும் விசாரணை நடத்தினர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கேட் கீப்பரிடமும் விசாரித்தனர். ஒரு மணி நேர விசாரணைக்கு பின்னர் குழுவினர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த தனியார் பள்ளியின் வேன் ஓட்டுநர் சங்கரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், மாணவர்களை காப்பாற்ற முயன்று படுகாயமடைந்த சிகிச்சை பெற்று வரும் அண்ணாதுரையிடம் விசாரிக்க டாக்டரிடம் கேட்டனர். ஒரு மணி நேர விசாரணைக்கு பின்னர் குழுவினர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த தனியார் பள்ளியின் வேன் ஓட்டுநர் சங்கரிடம் விசாரிக்க சென்றனர். அவர் புதுச்சேரி ஜிப்மருக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றதாக வார்டு டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த டாக்டர் பிரகாஷ் குமாரிடம் சங்கருக்கு ஏற்பட்ட படுகாயத்தின் தன்மை, தற்போது அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.

மேலும் பலியானவர்களின் உடல்கூறு பரிசோதனை விவரங்களையும் கேட்டறிந்தனர். பின்னர் இக்குழுவினர் ஜிப்மரில் 4வது மாடியில் அனுமதிக்கப்பட்டுள்ள வேன் டிரைவர் சங்கர் மற்றும் மாணவர்களை காப்பாற்ற முயன்று படுகாயமடைந்த அண்ணாதுரை ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தினர். இந்த ஆய்வு தொடர்பாக உண்மை கண்டறியும் விசாரணை குழுவினரிடம் கேட்டபோது, ‘சென்னையில் இருந்து 3 பேரும், திருச்சியில் இருந்து 3 பேரும் என ரயில்வே துறை சார்பில் கடலூர் ரயில் விபத்து தொடர்பான உண்மை கண்டறியும் குழுவில் விசாரணையில் உள்ளோம். ஓரிரு தினங்களில் விசாரணை முடிக்கப்பட்டு, அதன் அறிக்கை திருச்சி ரயில்வே பொதுமேலாளரிடம் வழங்கப்படும். வழக்கமாக இந்த விசாரணை முழுமையாக ரயில்வே சம்பந்தப்பட்டவர்களிடம் நடத்தப்படும். விபத்தில் படுகாயம் அடைந்துள்ள வேன் டிரைவர் மட்டும் விசாரிக்கப்படுவார். இதுபோன்ற விபத்துக்கள் இனி நடைபெறாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆய்வில் ஈடுபட்டுள்ளோம்’ என்றனர்.

The post கடலூர் ரயில் விபத்தில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் கேட் கீப்பர், ஸ்டேஷன் மாஸ்டர் உள்பட 13 பேருக்கு சம்மன்: விசாரணையை தொடங்கியது ரயில்வே appeared first on Dinakaran.

Related Stories: