* அரசு வேலை வாங்கி தருவதாக 200 பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி
சென்னை: காவல்துறை நண்பர்கள் உதவியுடன் ‘டவர் லொக்கேஷன்’ மூலம் ரியல் எஸ்டேட் அதிபர்களை கடத்தி துப்பாக்கி முனையில் பல கோடி பணம் பறித்ததாக அதிமுக நிர்வாகி அஜய் வாண்டையார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஐதராபாத் பகுதியை சேர்ந்த பரத்குமார் (39) என்ற இளம் தொழிலதிபர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் ஒன்று அளித்தார். அதில், நான் ‘ஸ்கிரின் எனர்ஜி பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் இயக்குநராக உள்ளேன். எங்கள் நிறுவனம் இந்தியா முழுவதும் சூரிய சக்தியில் மின் உற்பத்தி செய்யும் பிளாண்டை நிறுவி நிர்வகித்து வருகிறது.
கடந்த 10.3.2025 அன்று எங்கள் நிறுவனம் சார்பில் காஞ்சிபுரத்தில் சோலார் பவர் பிளாண்ட் நிறுவுவதற்கு அஜய் ரோகன் என்ற அஜய் வாண்டையார், சிவராஜன் சக்திவேல் ஆகியோரை அணுகி நிலம் வாங்குதல் மற்றும் பவர் பிளாண்ட் நிறுவ அங்கீகாரம் பெறுவது தொடர்பாக பேசினோம். அப்போது அரசு சார்பில் பவர் பிளாண்ட் நிறுவ அங்கீகாரம் மற்றும் நிலம் வாங்கி தருவதாக உறுதி அளித்தார். அதன்படி, அஜய் வாண்டையாரிடம் ரூ.2.11 கோடி கொடுத்தேன். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட அவர், எங்கள் நிறுவனத்திற்கு நிலம் மற்றும் அங்கீகாரம் பெற்று தராமல் ஏமாற்றிவிட்டார். பணத்தை திரும்ப கேட்டால் மிரட்டி வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்று புகார் அளித்திருந்தார்.
புகாரின்படி நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்திய போது, அஜய் வாண்டையார் தனது நண்பர்களான சிவராஜன் சக்திவேல், சந்திரகாந்த் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து தொழிலதிபரிடம் ரூ.2.11 கோடி பணம் பெற்று மோசடி செய்தது உறுதியானது. அதைதொடர்ந்து கடந்த மாதம் 3ம் ேததி அதிமுக நிர்வாகியான அஜய் வாண்டையார், அவரது நண்பர் சிவராஜன் சக்திவேல் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த சந்திரகாந்த் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, போலீசார் அஜய் வாண்டையார் உள்பட 4 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் அஜய் வாண்டையார் மீது தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலர் தங்களை ஏமாற்றி பணம் பறித்ததாக புகார் அளித்து வருகின்றனர். இதை தொடர்ந்து, ரூ.2.11 கோடி மோசடி வழக்கில் நுங்கம்பாக்கம் போலீசார் அஜய் வாண்டையார் மற்றும் அவரது நண்பர்களான சிவராஜன் சக்திவேல், சந்திரகாந்த் உள்பட 4 பேரை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவுப்படி ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணை முடிவில் அஜய் வாண்டையாரை போலீசார் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஒரு நாள் காவலில் நடத்தப்பட்ட விசாரணையின் போது அஜய் வாண்டையார் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: சென்னை பனையூாில் வசித்து வரும் அஜய் வாண்டையார், கடந்த ஆண்டு இறுதி வரை நடிகர் ஒருவர் கட்சியில் இளைஞர் அணி மாநில நிர்வாகியாக இருந்தார். அப்போது தமிழகம் முழுவதும் தனது நண்பரான ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சுனாமி சேதுபதியுடன் இணைந்து ரியல் எஸ்ேடட் அதிபர்களை மிரட்டி பணம் பறித்து வந்தது தெரியவந்துள்ளது. இதனால் நடிகர் கட்சியின் தலைவருக்கும் அஜய் வாண்டையாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் அஜய் வாண்டையார் நடிகர் கட்சியில் இருந்து விலகி, தனது தொழில் பாட்னரான பிரசாத் மூலம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கடந்த ஜனவரி மாதம் அதிமுகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார். அதன் பிறகு அஜய் வாண்டையார் தனது நண்பர்களுடன் இணைந்து அதிமுக பொதுச்செயலாளர் தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்ற தோற்றத்தை உருவாக்கி, அதன் மூலம் ஆந்திரா, தெலங்கானா மற்றும் தமிழகத்தை சேர்ந்த பல தொழிலதிபர்களுக்கு அரசு துறைகளில் ஒப்பந்தங்கள் பெற்று தருவதாக ஏமாற்றி பல கோடி ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது.
பணத்தை திரும்ப கேட்கும் தொழிலதிபர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்களை ராமநாதபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி சுனாமி சேதுபதி உதவியுடன் மிரட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதோடு இல்லாமல் டிஎன்பிஎஸ்சி, சென்னை பெருநகர மாநகராட்சி, வருமான வரித்துறை, ரயில்வே, மெட்ரோ வாட்டர் போன்ற துறைகளில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி ரூ.2 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை சுமார் 200 பேரிடம் ரூ.50 கோடிக்கு மேல் பணம் பெற்று ஏமாற்றியது தெரியவந்தது. பணம் கொடுத்த நபர்களுக்கு அரசு பணி கிடைக்காததால், அஜய் வாண்டையாரிடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர்.
அப்போது அவர்களை ரவுடி சுனாமி சேதுபதி உதவியுடன் மிரட்டி வந்தது தெரியவந்தது. மேலும், அதிமுக பெயரை பயன்படுத்தி அஜய் வாண்டையார் தனது காவல் நண்பர்களான மதுரை ஆயுதப்படை காவலர் செந்தில், அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத், சந்தோஷ் ஆகியோர் உதவியுடன் தனிப்படையில் பணியாற்றும் காவலர்கள் மூலம் கோவை, திருச்சி, மதுரை, சென்னை, தஞ்சை போன்ற நகரங்களில் பெரிய அளவில் தொழில் செய்யும் தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், கட்டுமான நிறுவன உரிமையாளர்களில் சிலரை அவர்களின் செல்போன் எண்ணை வைத்து கால் விவரங்கள், அவர்களின் ‘டவர் லொக்கேஷன்’ பெற்று நண்பரான ரவுடி சுனாமி சேதுபதி மூலம் அவர்களை கடத்தி வந்து தனி அறையில் அடைத்து துப்பாக்கி முனையில் மிரட்டி பல கோடி ரூபாய் பணம் பறித்து வந்துள்ளனர்.
சிலரிடம் பல கோடி மதிப்புள்ள நிலங்களை மிரட்டி எழுதி வாங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இப்படி மிரட்டி பறிக்கும் பணத்தை சட்ட விரோதமாக அஜய் வாண்டையார் தனது நிறுவனமான ‘ஏஜே டிராஸ்ட் மற்றும் எண்டர்பிரைசர்ஸ் என்ற அமைப்பில் முதலீடு செய்து வந்துள்ளார். அதன் மூலம் காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை, கோவை உள்ளிட்ட இடங்களில் நிலங்கள் வாங்கி குவித்துள்ளார். மேலும், அஜய் வாண்டையார் முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத்துடன் இணைந்து கொக்கைன் போதை பொருள் கடத்தல் மற்றும் புழக்கத்தில் விடுதல் போன்ற குற்றங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
அதன் மூலம் சம்பாதித்த பணத்தை அஜய் வாண்டையார் கிழக்கு கடற்கரை சாலையில் பங்களா வீடு, சொந்த ஊர்களில் பல ஏக்கர் நிலங்கள், பல நிறுவனங்களில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு, பல கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள் வாங்கி தனது காதல் மனைவியுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக, விசாரணையின் போது வாக்குமூலமாக அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே அஜய் வாண்டையார் பின்னணியில் அரசியல் பிரமுகர்கள் பலருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் உறுதியாகி உள்ளது. அவரது வாக்குமூலத்தின்படி விரைவில் அதிமுக பிரமுகர்கள் மகன்கள் மற்றும் சில அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் மோசடி தொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அஜய் வாண்டையார் முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத்துடன் இணைந்து கொக்கைன் போதை பொருள் கடத்தல் மற்றும் புழக்கத்தில் விடுதல் போன்ற குற்றங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
The post காவல்துறை நண்பர்கள் துணையுடன் ‘டவர் லொக்கேஷன்’ மூலம் ரியல் எஸ்டேட் அதிபர்களை கடத்திச் சென்று துப்பாக்கி முனையில் பலகோடி பணம் பறிப்பு appeared first on Dinakaran.
