ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் 3வது டெஸ்ட் லார்ட்சில் நாளை தொடக்கம்: வெற்றியை தொடருமா இந்தியா?


* பும்ரா களம் இறங்குகிறார்

லண்டன்: சுப்மன்கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் கொண்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் விளையாடி வருகிறது. 2025-27ம் ஆண்டுஐசிசிடெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்குட்பட்டஇந்த டிராபியில் லீட்சில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தொடர்ந்து பர்மிங்காமில் நடந்த 2வதுடெஸ்ட்டில் இந்தியா 336 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பதிலடி கொடுத்தது. 1-1 என தொடர் சமனில் இருக்க 3வது டெஸ்ட் நாளை கிரிக்கெட்டின் மெக்கா என அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. 2வது டெஸ்ட்டில் வெற்றிபெற்ற உத்வேகத்தில் இந்தியா களம் இறங்குகிறது. பேட்டிங்கில் சுப்மன் கில், 4 இன்னிங்சில் ஒருஇரட்டைசதம், 2 சதம் என 585 ரன் விளாசி உள்ளார்.

ரிஷப் பன்ட் 342, கே.எல்.ராகுல் 236, ஜெய்ஸ்வால் 220,ஜடேஜா 194 ரன் என பேட்டிங்கில் மிரட்டுகின்றனர். பவுலிங்கில் பும்ரா வருகை கூடுதல் பலம் கொடுக்கும். பவுலிங்கில் ஆகாஷ் தீப் 10, முகமது சிராஜ் 9, முதல் டெஸ்ட்டில் பும்ரா 5 விக்கெட் எடுத்தனர். பும்ராவருகையால் பிரசித் கிருஷ்ணாவுக்கு கல்தா கொடுக்கப்படுகிறது. சிராஜூக்கு ஓய்வு அளித்துவிட்டு அர்ஷ்தீப் சிங்கை சேர்க்கவும் ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது. மற்றபடி எந்த மாற்றமும் இருக்காது. மறுபுறம் இங்கிலாந்து அணி மீண்டும் வெற்றிபெற்று முன்னிலை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஜேமி ஸ்மித் 4இன்னிங்சில் 2ல் நாட்அவுட் என 356ரன் எடுத்து பேட்டிங்கில் முதுகெலும்பாக உள்ளார். ஹாரி புரூக் 280, பென் டக்கெட் 236ரன் அடித்துள்ளனர் . பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 109, ஒல்லி போப் 138 ரன்னே எடுத்துள்ளனர்.

பவுலிங்கில் டங் 11 விக்கெட் எடுத்துள்ளார். பென் ஸ்டோக்ஸ் 86ரன், 6 விக்கெட் எடுத்திருக்கிறார். நாளை கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் டங்கிற்கு பதில் சோப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன் ஆகியோர் களம் இறங்க உள்ளனர். இதனால் அந்தஅணியின் பவுலிங் பலம் அதிகரிக்கலாம். ஆர்ச்சர் 2 ஆண்டுக்குபின் ரெட்பால் கிரிக்கெட்டில் ஆட உள்ளார். போட்டி தினமும் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். இரு அணிகளும் இந்த டெஸ்ட்டில் வெற்றி பெற்று முன்னிலை பெறும் முனைப்பில் களம் இறங்குவதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

லார்ட்சில் இந்தியாவின் 3 வெற்றி!
இந்திய அணி லார்ட்சில் கடைசியாக கடந்த 2021ம் ஆண்டு இங்கிலாந்துக்குஎதிராக மோதிய டெஸ்ட்டில் 151 ரன்வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 364, இங்கிலாந்து 391ரன் அடித்தன. 2வது இன்னிங்சில் 8 விக்கெட் இழந்து 298 ரன் எடுத்துடிக்ளேர் செய்தது. பின்னர் 272ரன் இலக்கை துரத்திய இங்கிலாந்து 51.5 ஓவரில் 120 ரன்னுக்கு சுருண்டது. சிராஜ் 4, பும்ரா 3 விக்கெட் எடுத்துவெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர். இதற்கு முன் 2014ல் டோனி தலைமையிலான இந்திய அணி 95ரன் வித்தியாத்திலும்,1986ல் கபில்தேவ் தலைமையில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது.

இதுவரை நேருக்கு நேர்…
இரு அணிகளும் நாளை 139வது முறையாக டெஸ்ட்டில் மோத உள்ளன.இதற்கு முன் மோதிய 138 போட்டியில் இங்கிலாந்து 52, இந்தியா 36ல் வென்றுள்ளன. 50 டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளது. கடைசியாக மோதிய 5 போட்டியில் 4ல் இந்தியா, 1ல் இங்கிலாந்து வென்றுள்ளது.

லார்ட்ஸ் மைதானத்தில்……
வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இரு அணிகளும் இதற்கு முன் 19 டெஸ்ட்டில் மோதி உள்ளன. ,இதில் 12ல் இங்கிலாந்து, 3ல் இந்தியா வென்றுள்ளன. 4 டெஸ்ட் டிராவில் முடிந்திருக்கிறது. இங்கிலாந்து இங்கு இதுவரை 145 டெஸ்ட்டில் விளையாடி 59ல் வெற்றி, 35ல் தோல்வி அடைந்துள்ளது. 51 டெஸ்ட் டிராவில் முடிந்திருக்கிறது. இங்கிலாந்தில் கோடை காலம் என்பதால் போட்டி நடைபெறும் 5 நாட்களிலும் மழைக்கு வாய்ப்பு இல்லை. அதிகபட்ச வெப்ப நிலை 88 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும்.

லார்ட்ஸ் ரெக்கார்டு…
*ஆஸ்திரேலியா இங்கு 1930ல் 729/6d ரன் எடுத்ததுதான் அதிகபட்ச ரன். இங்கிலாந்தின் பெஸ்ட் ஸ்கோர் இந்தியாவுக்கு எதிராக 1990ல் 653/4d. இந்தியா இங்கு 1990ல் 454ரன் எடுத்தது தான் அதிகபட்ச ரன்.
* இந்தியாவின் குறைந்த ரன் 42, இங்கிலாந்து 53.
* ஜோ ரூட் இங்கு 22 டெஸ்ட்டில் 7 சதத்துடன் 2022ரன் அடித்துள்ளார்.
* பவுலிங்கில் ஆண்டர்சன் 29 டெஸ்ட்டில் 123 விக்கெட் எடுத்துள்ளார்.

The post ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் 3வது டெஸ்ட் லார்ட்சில் நாளை தொடக்கம்: வெற்றியை தொடருமா இந்தியா? appeared first on Dinakaran.

Related Stories: