10 வயது சிறுமிக்கு வாயில் மது ஊற்றி பாலியல் கொடுமை: தாய், கள்ளக்காதலன் கைது

சேலம்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே வடக்கு நரசிங்கபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர், கடந்த 10 ஆண்டுக்கு முன் அப்பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 27 வயதான அப்பெண்ணுக்கு 10 வயதில் மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர். அந்த பெண், திருமணத்திற்கு முன்பே, ஆத்தூர் புங்கவாடி வடக்கு செங்காடு பகுதியை சேர்ந்த முத்து (33) என்பவரை காதலித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன், மீண்டும் பழைய காதலனை சந்தித்த அப்பெண், கடந்த பிப்ரவரி மாதம், இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவருடன் ஓட்டம் பிடித்தார்.

இந்நிலையில், கடந்த 4ம் தேதி ஆத்தூர் உழவர்சந்தை பகுதியில், தனது பிள்ளைகள் இருவரையும், மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் அழைத்துச் சென்றதை பார்த்த தொழிலாளி, பின்தொடர்ந்து சென்றார். பிறகு அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றதும், தனது பிள்ளைகளை பார்த்து, பெற்ற தந்தையான என்னுடன் வராமல் இருந்து விட்டீர்களே என கேட்டுள்ளார். அப்போது, அவரது மகள் கூறுகையில், ‘எனது தாயும், அவரது காதலன் முத்துவும் ஒன்றாக மது குடித்து விட்டு, எனக்கும் வாயில் மதுவை வலுக்கட்டாயமாக ஊற்றி பாலியல் தொல்லை கொடுக்கின்றனர். முத்து நிர்வாணமாக வீட்டில் சுற்றித்திரிந்து, எனக்கு கண்ட இடங்களிலெல்லாம் முத்தம் கொடுக்கிறார். அதனை பார்த்தும், இதுவெல்லாம் ஒன்றுமில்லை பாப்பா எனக்கூறி, தாய் கண்டுகொள்வதில்லை.

என்னை எப்படியாவது உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்,’ எனக்கூறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளி அளித்த புகாரின்பேரில், ஆத்தூர் போலீசார், தாய் மற்றும் காதலன் முத்து மீது, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post 10 வயது சிறுமிக்கு வாயில் மது ஊற்றி பாலியல் கொடுமை: தாய், கள்ளக்காதலன் கைது appeared first on Dinakaran.

Related Stories: