விருத்தாசலம், ஜூலை 5: காதலிக்க கட்டாயப்படுத்தி பள்ளி மாணவியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி (பெயர் மாற்றம் ெசய்யப்பட்டுள்ளது). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள் வயது முறையே 16, 15 வயதில் உள்ளனர். கணவர், வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் மனைவி, தனது 2 பெண் பிள்ளைகளுடன் விருத்தாசலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இரண்டு மகள்களையும் விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்க வைத்து வருகிறார். மூத்த மகள் 12ம் வகுப்பும், இளைய மகள், 11ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை இரண்டு ெபண் பிள்ைளகளும் பள்ளிக்கு செல்வதற்காக விருத்தாசலம் கடைவீதியில் இருந்து பள்ளிக்கு செல்லும் பேருந்துக்காக காத்திருந்தனர். தொடர்ந்து தனியார் பேருந்து ஒன்றில் இருவரும் ஏறி உள்ளனர். அப்போது 12ம் வகுப்பு படிக்கும் மாணவியின் பின்னால் திடீரென வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென மாணவியை பேருந்திலிருந்து கீழே இழுத்து தள்ளியுள்ளார். இதனால் நிலைகுலைந்து போன மாணவி கீழே விழுந்துள்ளார். பின்னர் அந்த வாலிபர், மாணவியை தாக்கியதுடன் என்னை காதலிக்க மாட்டாயா எனக்கூறி கையில் இருந்த பேனா கத்தியால் தலையில் குத்தி தாக்கியுள்ளார். இதில் தலையில் இருந்து ரத்தம் கொட்டவே அதிர்ந்து போன மாணவி வலியால் துடித்து அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.
தொடர்ந்து மாணவியின் தங்கை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் ஓடி வந்து அந்த வாலிபரை பிடிக்க முயற்சிப்பதற்குள் அவர் தப்பித்து ஓடி அவருக்காக காத்திருந்த மற்றொரு நபருடன் பைக்கில் ஏறி தலைமறைவானார். தொடர்ந்து விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற விருத்தாசலம் போலீசார் மாணவியை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மாணவியிடம் விசாரித்தபோது, அந்த வாலிபர் கோபாலபுரம் புதுரோட்டைச் சேர்ந்த அருண்குமார் என்பதும், பத்தாம் வகுப்பு படித்தபோது அவர் என்னை காதலிப்பதாக கூறி வற்புறுத்தினார். இதனால் நான் எனது தாயிடம் கூறினேன். அப்போது எனது தாய் அந்த அருண்குமாரை கண்டித்ததன் பேரில் அவர் என்னிடம் தொந்தரவு செய்யாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் இன்று (நேற்று) மீண்டும் என்னை காதலிக்க வேண்டும் என்று வற்புறுத்தி என்னை கத்தியால் குத்திவிட்டார் என தெரிவித்தார். தொடர்ந்து மாணவியிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார் மற்றும் அவருடன் வந்த வாலிபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவியிடம் காதலிக்க வற்புறுத்தி வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post காதலிக்க கட்டாயப்படுத்தி பிளஸ் 2 மாணவிக்கு கத்தி குத்து appeared first on Dinakaran.
