அன்புமணிக்கு போட்டியாக மாவட்ட பொதுக்குழுவை கூட்டுகிறார் ராமதாஸ்

திண்டிவனம், ஜூலை 2: அன்புமணிக்கு போட்டியாக பாமக நிறுவனர் ராமதாஸ் மாவட்டம் தோறும் பொதுக்குழு கூட்டங்களை நடத்தி, கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளார். வரும் 10ம்தேதி கும்பகோணத்தில் நடக்கும் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார். அதன்பின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவும் முடிவு செய்துள்ளார். பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி மோதல் நாளுக்குநாள் வலுத்து வருகிறது. இருவரும் போட்டி போட்டு நிர்வாகிகளை நியமிப்பதும், நீக்குவதுமாக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பொதுச்செயலாளர், பொருளாளர் என முக்கிய பதவியில் இருப்பவர்களையே பந்தாடி வருவதால் கட்சி கலகலத்துபோய் உள்ளது. இரண்டாக பிளவுபட்டு கிடக்கும் கட்சியை முழுமையாக கைப்பற்றும் முயற்சியில் இருவரும் தீவிரமாக இறங்கி விட்டனர்.

ஆரம்பத்தில் ராமதாசின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலடி கொடுக்காமல் அமைதி காத்து வந்த அன்புமணி, பனையூரில் கடந்த மாதம் 28ம்தேதி நடந்த சமூக ஊடக பேரவை கலந்தாய்வு கூட்டத்தில் பேசும்போது, ‘கடந்த 5 ஆண்டுகளாக ராமதாஸ் வயது முதிர்வின் காரணமாக குழந்தைபோல் மாறிவிட்டார். அவருடன் இருக்கும் 3 பேர் தங்கள் சுயலாபத்திற்காக அவரை பயன்படுத்திக் கொள்கின்றனர். கொள்ளையடிப்பவனுக்கும் கொலை செய்பவனுக்கும் ராமதாஸ் பொறுப்பு வழங்குகிறார். ராமதாஸ் பேட்டியில் கூறுவது அத்தனையும் பொய்’ என்றெல்லாம் ஆவேசமாக தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார். அன்புமணியின் இந்த பேச்சு ராமதாஸ் ஆதரவாளர்களிடைய கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து சேலம் மேற்கு மாவட்ட பாமக எம்எல்ஏ அருள், அன்புமணிக்கு பதிலடி கொடுத்தார். அதற்கு அவரை கண்டித்து முன்னாள் எம்எல்ஏ கார்த்தி பேட்டி கொடுத்தார். இப்படி இருதரப்பும் மாறி, மாறி தாக்க தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையில், அன்புமணி மாவட்டம்தோறும் பொதுக்குழு கூட்டங்கள் நடத்தி கட்சிக்காரர்களை தன்பக்கம் வளைத்து வருவதுபோல ராமதாசும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று தொண்டர்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்திக்க முடிவெடுத்துவிட்டார். அதாவது வருகிற 10ம்ேததி தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பொதுக்குழு கூட்டம் கும்பகோணம் எஸ்.இ.டி. மகாலில் நடக்கிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் கலந்து கொள்கிறார். கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், ராமதாசால் புதிதாக பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ள மாநில நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்திற்கு பின் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் இவ்வாறு பொதுக்குழுவை கூட்டி சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். வயது முதிர்வின் காரணமாக ராமதாஸ் தீவிரமாக கட்சி பணியாற்ற முடியாது என அன்புமணி கூறிவரும் குற்றச்சாட்டுகளை பொய்யாக்கி வயதானாலும் தன்னால் களத்துக்கு சென்று தீவிரமாக கட்சி பணியாற்ற முடியும் என செயலில் காட்டுவதற்காகவும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தைலாபுரம் வட்டாரம் தெரிவிக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஆகஸ்ட் மாதம் பூம்புகாரில் நடக்கும் மகளிர் மாநாட்டை அன்புமணியின் பங்களிப்பு இல்லாமல் சிறப்பாக நடத்தி காட்ட வேண்டுமென்ற வைராக்கியமும் ராமதாசுக்கு எழுந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாமல்லபுரம் வன்னிய இளைஞர் மாநாட்டை அன்புமணி வெற்றிகரமாக நடத்தினார். அன்புமணி தலைமையில்தான் இந்த மாநாட்டு ஏற்பாடுகள் நடந்தன. அவர்தான் மாவட்டங்கள் தோறும் சென்று தொண்டர்களை சந்தித்து அவர்களை மாநாட்டில் பங்கேற்க வைத்தார். அதேபோல் பூம்புகார் மாநாட்டுக்கு தனது தீவிர ஆதரவாளரான வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழியை நியமித்துள்ள ராமதாஸ் மாமல்லபுரம் மாநாட்டை விட அதிகளவில் மகளிர் கூட்டத்தை சீருடையுடன் கூட்டி சிறப்பாக நடத்தி காட்டி கட்சி இன்னும் தன் முழு கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கிறது என்பதை எல்லோருக்கும் பறைசாற்ற முடிவு செய்து களத்தில் குதித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

The post அன்புமணிக்கு போட்டியாக மாவட்ட பொதுக்குழுவை கூட்டுகிறார் ராமதாஸ் appeared first on Dinakaran.

Related Stories: