ஜெகன் மோகன் ரெட்டி கார் டயரில் சிக்கி தொண்டர் பலி.. 6 பேர் மீது வழக்குப் பதிவு: கார் ஓட்டுநர் கைது..!!

அமராவதி: ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டயரில் சிக்கி தொண்டர் உயிரிழந்த விவகாரத்தில் ஜெகன் மோகன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்தில் உள்ள பல்நாடு மாவட்டம், ரெண்டபல்லா கிராமத்து கட்சியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளார். அங்கு அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு, ஜெகன்மோகன் ரெட்டி காரில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது ​​எட்டுகுரு பைபாஸ் சாலை அருகே ஜெகன்மோகன் ரெட்டியின் கான்வாய் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டரான செல்லி சிங்கையா(62) என்பவர் ஜெகன்மோகன் ரெட்டியை வரவேற்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது, ஜெகன் மோகன் ரெட்டியின் காரின் மீது தொண்டர்கள் சிலர் ஏறினர். செல்லி சிங்கையாவும் காரின் மீது ஏற முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது கால் தவறி காரின் அடியில் சிங்கையா கீழே விழுந்துள்ளார். இதனை ஜெகன்மோகன் ரெட்டி, தொண்டர்கள் என யாரும் கவனிக்காத நிலையில், ஓட்டுநரும் காரை முன்னோக்கி இயக்கியுள்ளார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி சென்ற காரின் முன்பக்க சக்கரத்தில் சிங்கையா சிக்கி இறந்ததும், அந்த காரில் நின்று கொண்டு ஜெகன் மோகன் கை அசைப்பதும், கார் மீது ஒரு தொண்டர் ஏறி நின்று நடனமாடியபடி இருக்கும் வீடியோ வெளியாகி காண்போரை கண் கலங்கச் செய்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டி, உதவியாளர் நாகேஸ்வர ரெட்டி, முன்னாள் எம்பி சுப்பா ரெட்டி, முன்னாள் அமைச்சர் விடதலா ரஜினி, முன்னாள் எம்எல்ஏ பேர்னி நானி ஆகிய 6 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஜெகன் மோகன் ரெட்டியின் கார் ஓட்டுநரான ரமண ரெட்டியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

The post ஜெகன் மோகன் ரெட்டி கார் டயரில் சிக்கி தொண்டர் பலி.. 6 பேர் மீது வழக்குப் பதிவு: கார் ஓட்டுநர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: