இதுகுறித்து ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது: அத்தியூர் திருவாதி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் வடக்குக் கரையில் சிறிய கோயில் அமைத்து அம்மன் என வழிபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் தான் இந்த சிற்பம் கிடைத்தது. இந்தச் சிற்பம் வடமொழியில் ஜேஷ்டா தேவி என்று அழைக்கப்படும் மூத்ததேவி சிற்பம் ஆகும். பல்லவர் காலத்தைச் (கி.பி.7-8ம் நூற்றாண்டு) சேர்ந்தது. 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.
ஜடாபாரம் எனப்படும் உச்சிக் கொண்டையுடன் கூடிய தலை அலங்காரத்துடன் மூத்த தேவி சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. காதணிகள் கழுத்தணி, கனத்த மார்புகள், சரிந்த வயிற்றுடன் அழகாக காட்சியளிக்கிறாள். இடுப்பு முதல் கணுக்கால் வரை இடை ஆடை காட்டப்பட்டுள்ளது. மார்பு கச்சை காட்டப்படவில்லை. வலது கரம் தாமரை மொட்டினை ஏந்தியுள்ளது. இடது கரம் செல்வக் குடத்தின் மீது வைத்த நிலையில் காணப்படுகிறது. இரண்டு கால்களையும் அகட்டி தொங்கவிட்ட நிலையில் பத்திராசனத்தில் அமர்ந்து இருக்கிறாள்.
மூத்த தேவியின் இருபக்கங்களிலும் அவளது மகன் மாந்தன் மகள் மாந்தி ஆகியோர் குழந்தை வடிவில் காட்டப்பட்டுள்ளனர். பொதுவாக மூத்த தேவி சிற்பங்களில் அவளது கொடியான காக்கைக் கொடி ஓரிடத்தில் மட்டுமே காட்டப்பட்டிருக்கும். ஆனால் இந்தச் சிற்பத்தில் வலது, இடது என இரண்டு பக்கங்களிலும் காக்கைக் கொடி காட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் மூத்ததேவி சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த வகையில் அத்தியூர் திருவாதி மூத்த தேவி சிற்பம் பல்லவர் கலை வரலாற்றுக்குப் புதிய வரவாகும். இவ்வாறு அவர் கூறினார்.
The post விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றங்கரையில் பல்லவர் கால சிற்பம் கண்டுபிடிப்பு: 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது appeared first on Dinakaran.