பாதுகாப்பு விதிமீறல்.. ஏர் இந்தியா நிறுவனத்தில் 3 மூத்த அதிகாரிகளை நீக்க விமான போக்குவரத்துத் துறை ஆணை..!!

டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தில் 3 மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க விமான போக்குவரத்துத் துறை ஆணையிட்டுள்ளது. அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த 12ம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், வானில் பறக்க துவங்கிய 30 வினாடிகளில் விழுந்து வெடித்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் விமான பயணிகள் உட்பட 241 பேர் உயிரிழந்தனர். விமானம் விழுந்த பிஜி மருத்துவமனை விடுதி கட்டிடத்தில் இருந்த 29 பேர் உயிரிழந்தனர். விமான பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்து குறித்து விமான போக்குவரத்து துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் ஜூன் 13 மற்றும் ஜூன் 16 ஆகிய இரு தேதிகளில் டிஜிட்டல் விமானத் தரவுப் பதிவுப் பெட்டி (DFDR) மற்றும் காக்பிட் குரல் பதிவுப் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது இவை ஆய்வுக்காக அமெரிக்கா அனுப்பப்படவுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் 3 ஏர் இந்தியா அதிகாரிகளை நீக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. அந்த மூன்று மூத்த அதிகாரிகளை, பணியாளர் திட்டமிடல் மற்றும் அட்டவணைப்படுத்துதல் தொடர்பான அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக நீக்க வேண்டும். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அந்த அறிக்கையை 10 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளது.

அதாவது விமானப் பணியாளர்களின் உரிமம், ஓய்வு நேரம் மற்றும் சமீபத்திய தகுதித் தேவைகளில் பலமுறை விதிமீறல்கள் நடந்ததாக ஏர் இந்தியா தானாக முன்வந்து ஒப்புக்கொண்டதை தொடர்ந்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மே 16, 17 தேதிகளில் பெங்களூரு டூ லண்டன் இடையே இயக்கப்பட்ட இரண்டு விமானங்களில் விமானிகள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் விமானத்தை இயக்க வைக்கப்பட்டிருப்பதாக டிஜிசிஏ கூறுகிறது.

விமான கடமை நேர வரம்பு மீறல் தொடர்பாகவும் விளக்கம் கேட்டு டிஜிசிஏ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எதிர்காலத்தில் பணியாளர் திட்டமிடல் விதிமுறைகள், உரிமம் அல்லது விமான நேர வரம்புகளில் ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், அபராதங்கள், உரிமம் ரத்து அல்லது இயக்க அனுமதி ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிஜிசிஏ எச்சரித்துள்ளது.

The post பாதுகாப்பு விதிமீறல்.. ஏர் இந்தியா நிறுவனத்தில் 3 மூத்த அதிகாரிகளை நீக்க விமான போக்குவரத்துத் துறை ஆணை..!! appeared first on Dinakaran.

Related Stories: