மலையாள சினிமாவில் பணிபுரிய போதைப்பொருள் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதிமொழி எழுதி கொடுக்க வேண்டும்: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு கிடுக்கிப்பிடி போட தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. படப்பிடிப்புத் தளங்களிலோ, தங்கும் இடங்களிலோ போதைப்பொருள் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதிமொழி எழுதிக் கொடுத்தால் மட்டுமே இனி சினிமாவில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். மலையாள சினிமாவில் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்பட பலர் போதைப்பொருள் பயன்படுத்துவதாக நீண்ட காலமாக புகார் கூறப்பட்டு வருகிறது. இதன் மூலம் படப்பிடிப்புகள் தாமதமாவதால் தயாரிப்பாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன் கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பிரபல மலையாள முன்னணி நடிகர் ஷைன் டோம் சாக்கோ கைது செய்யப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.3 கோடி மதிப்புள்ள உயர்ரக கலப்பின கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட தஸ்லிமா சுல்தான் என்ற பெண்ணுடன் இவருக்கும், மஞ்சும்மல் பாய்ஸ் புகழ் நடிகர் ஸ்ரீநாத் பாசிக்கும் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மலையாள சினிமா கலைஞர்களை போதைப்பொருள் தடுப்புத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர்கள் உள்பட கலைஞர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்து வந்த 3 பவுன்சர்கள் கைது செய்யப்பட்டனர். மலையாள திரையுலகினருக்கு எதிராக நாளுக்கு நாள் போதைப்பொருள் புகார்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, இதற்கு கடிவாளம் போட மலையாள சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது தீர்மானித்துள்ளது.

இனி மலையாள சினிமாவில் பணிபுரிய வேண்டுமென்றால் படப்பிடிப்புத் தளத்திலோ, தங்கும் இடங்களிலோ தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பயன்படுத்த மாட்டேன் என்று நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்பட அனைவரும் உறுதிமொழி எழுதிக் கொடுக்க வேண்டும். கடந்த சில தினங்களுக்கு முன் கொச்சியில் நடைபெற்ற மலையாள சினிமா தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சம்பள ஒப்பந்தத்துடன் இந்த உறுதிமொழியையும் கையெழுத்திட்டு கொடுக்க வேண்டும். இதை மீறி பயன்படுத்தினால் அதன் மூலம் தயாரிப்பாளருக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினமான ஜூன் 26ம் தேதி முதல் இதை அமல்படுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக மலையாள நடிகர்கள் சங்கம் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

 

The post மலையாள சினிமாவில் பணிபுரிய போதைப்பொருள் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதிமொழி எழுதி கொடுக்க வேண்டும்: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: