சென்னை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதுநிலைப் பாடப்பிரிவு மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவினை இன்று (20.06.2025) சென்னை இராணி மேரி கல்லூரியில் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவிசெழியன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது: அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இன்று (20.06.2025) முதல் 09.07.2025 வரை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.
18.07.2025 அன்று மாணாக்கர் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். 21.07.2025 முதல் 25.07.2025 க்குள் மாணாக்கர்கள் தங்கள் விருப்ப கல்லூரியைத் தேர்வு செய்யலாம். 28.07.2025 அன்று மாணாக்கர்களுக்கான இட ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும்.
மாணாக்கர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆணையை தங்கள் உள்நுழைவு ID மூலம் www.iwiase.ac.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேரவேண்டும். ஆகஸ்டு 6 முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு வகுப்புகள் தொடங்கும். பி.எட். 2025-26 சேர்க்கைத் தொடர்பான விவரங்கள் கீழ்குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும், 2025 – 2026 ஆம் கல்வியாண்டில், 110 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப்படிப்பிற்கான மாணாக்கர் சேர்க்கை இடங்கள் 24,309 உள்ளன. இதற்கு மாணாக்கர்கள் விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு இன்று (20.06.2025) முதல் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்டு 4 முதல் அனைத்து முதுநிலை முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு வகுப்புகள் தொடங்கும். 2025-26 முதுநிலைப் பாடப்பிரிவுகளுக்கான மாணாக்கர் சேர்க்கை தொடர்பான விவரங்கள் கீழ்குறிப்பிடபட்டுள்ளன.
மாணாக்கர்கள் தாங்கள் விருப்பிய பாடப்பிரிவுகளை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பித்து இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் எதிர்காலத்தை வளமாக்கி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு, உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கல்லூரிக் கல்வித் துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 6 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை செயலாளர், கல்லூரிக் கல்வி ஆணையர் இராணி மேரி கல்லூரி முதல்வர், உயர்கல்வித் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post முதுநிலைப் பாடப்பிரிவு மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவினை தொடங்கி வைத்தார் அமைச்சர் கோவி.செழியன் appeared first on Dinakaran.