ஜார்கண்ட், சட்டீஸ்கர் என்கவுன்டரில் 7 நக்சல்கள் சுட்டுக்கொலை: பாதுகாப்புப் படைகள் அதிரடி

ராஞ்சி: ஜார்கண்ட், சட்டீஸ்கரில் நடந்த இரு வெவ்வேறு என்கவுன்டரில் 7 நக்சல்களை பாதுகாப்புப் படைகள் சுட்டுக் கொன்றன. ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில், நக்சலைட் எனப்படும் தீவிரவாதக் குழுக்களின் ஆதிக்கம் பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது. அடர்ந்த வனப்பகுதிகளைத் தங்களது புகலிடமாகக் கொண்டு செயல்படும் இவர்கள், பாதுகாப்புப் படையினர் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துவதையும், அரசு சொத்துக்களைச் சேதப்படுத்துவதையும், அப்பாவி மக்களை அச்சுறுத்துவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இவர்களை முழுமையாக ஒழிக்கும் நோக்கில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இணைந்து, சிஆர்பிஎஃப்-ன் கோப்ரா படை, மாநில சிறப்பு அதிரடிப் படைகள் மற்றும் மாவட்டக் காவல்துறையின் உதவியுடன் தொடர் தேடுதல் வேட்டைகளையும், என்கவுண்டர் நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்தச் சூழலில், நேற்று ஜார்கண்ட் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் பாதுகாப்புப் படையினர் நடத்திய இரண்டு வெவ்வேறு என்கவுண்டர் நடவடிக்கைகளில், மொத்தம் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜார்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.

அவர்களிடமிருந்து இன்சாஸ் மற்றும் எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்று, சட்டீஸ்கரின் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லையில் நடந்த மற்றொரு என்கவுண்டரில் 4 நக்சல்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இவர்களிடமிருந்தும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒரே நாளில் நடந்த இந்த இரண்டு வெற்றிகரமான நடவடிக்கைகள், நக்சல்கள் இயக்கத்திற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

The post ஜார்கண்ட், சட்டீஸ்கர் என்கவுன்டரில் 7 நக்சல்கள் சுட்டுக்கொலை: பாதுகாப்புப் படைகள் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: